எல்லை பாதுகாப்பு படை வீரர் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி


பயிற்சியின் போது சேற்றுக்குள் சிக்கி எல்லை பாதுகாப்பு படை வீரர் மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு ராஜபாளையத்தில் துப்பாக்கி குண்டுகள் முழங்க இறுதி மரியாதை அளிக்கப்பட்டது.

விருதுநகர்

ராஜபாளையம்.

பயிற்சியின் போது சேற்றுக்குள் சிக்கி எல்லை பாதுகாப்பு படை வீரர் மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு ராஜபாளையத்தில் துப்பாக்கி குண்டுகள் முழங்க இறுதி மரியாதை அளிக்கப்பட்டது.

எல்லை பாதுகாப்பு படை வீரர்

தூத்துக்குடி மாவட்டம் மாதலப்புரம் பகுதியை சேர்ந்தவர் செந்தில் குமரன் (வயது 41). எல்லை பாதுகாப்பு படை வீரர். இவருடைய மனைவி சண்முகலட்சுமி. இவர்களுக்கு 15 வயதில் முகேஷ் என்ற மகனும், 10 வயதில் மதுமித்ரா என்ற மகளும் உள்ளனர்.

சண்முகலட்சுமியின் சொந்த ஊரான விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மாடசாமி கோவில் தெரு பகுதியில் வசித்து வந்தனர்.

செந்தில்குமார் ராஜஸ்தான் மாநிலத்தில் பணியாற்றினார். பின்னர் கான்ஸ்டபிளாக பதவி உயர்வு கிடைக்கப்பெற்று ஒடிசாவில் உள்ள 142 பட்டாலியனுக்கு தேர்வு செய்யப்பட்டார். நக்சல் தடுப்பு பிரிவில் பணியாற்றுவதற்காக பெங்களூருவை அடுத்த கராலியில் செயல்படும் மையத்தில் பயிற்சி பெற்று வந்தார். நேற்று முன்தினம் காலை நடந்த பயிற்சியின்போது, தவறி விழுந்த செந்தில் குமரன் சேற்றுக்குள் சிக்கி உயிரிழந்தார்.

இறுதி மரியாதை

இந்த விபரீத சம்பவத்தையடுத்து அவரது உடல் நேற்று ராஜபாளையத்துக்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடலை பார்த்து குடும்பத்தினர் கதறியது சோகத்தை ஏற்படுத்தியது. பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் தேசியக்கொடி போர்த்தப்பட்டு, ராணுவ வாகனத்திலேயே அவரது உடல் மயானம் வரை எடுத்து செல்லப்பட்டது. அங்கு 24 துப்பாக்கி குண்டுகள் முழங்க செந்தில் குமரன் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. அவரது உடலில் போர்த்தப்பட்டிருந்த தேசியக்கொடியை, அவரது மகன் முகேஷிடம் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் வழங்கினர். பின்னர் உடல் தகனம் நடந்தது.


Related Tags :
Next Story