பொதுமக்கள் சாலை மறியல்
தஞ்சை அருகே சாலைப்பணிகளை விரைந்து முடிக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தஞ்சை அருகே சாலைப்பணிகளை விரைந்து முடிக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலைப்பணி
தஞ்சை சீனிவாசபுரம் கிரிரோட்டில் புதிதாக சாலை அமைப்பதற்காக ஏற்கனவே போடப்பட்டிருந்த பழைய சாலை பெயர்க்கப்பட்டுள்ளது. இதனால் வாகனங்களில் வருபவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்தநிலையில் நேற்றுமாலை கிரிரோட்டில் சாலையை பெயர்க்கும் எந்திரம் நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த ஒருவர், சாலையை பெயர்த்து போட்டு பல நாட்கள் ஆகிறது எனவும், சாலை எப்போது போடப்படும் எனவும் கேள்வி எழுப்பினர்.
தாக்குதல்
இதனால் தனியார் ஒப்பந்த நிறுவன ஊழியர்களுக்கும், அந்த நபருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஊழியர்கள் அந்த நபரை தாக்கினர். இதை பார்த்த அப்பகுதி மக்கள் திரண்டு வந்து ஊழியர்களை தாக்கினர். இது குறித்து தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.அவர்கள் ஒப்பந்த நிறுவன ஊழியர்களை வாகனத்தை எடுத்து கொண்டு அங்கிருந்து புறப்படும்படி கூறினர். இதை பார்த்த பொதுமக்கள், போலீசார் ஒரு தலைபட்சமாக செயல்படுவதாக கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனே துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.