குடிநீர் வராததால் பொதுமக்கள் அவதி
கொளப்பள்ளியில் குடிநீர் வராததால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
பந்தலூர்
கொளப்பள்ளியில் குடிநீர் வராததால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
குடிநீர் வினியோகம்
பந்தலூர் அருகே கொளப்பள்ளி பஜார், பாடசாலை வீதி, அண்ணா நகர், பேக்டரி மட்டம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், கடந்த சில நாட்களாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்பட வில்லை. இதனால் வீடுகளில் சமையல் உள்பட அத்தியாவசிய தேவைகளுக்கு தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி அடைகின்றனர்.
மேலும் பெண்கள் காலிக்குடங்களுடன் குடிநீர் தேடி அலையும் நிலை உள்ளது. மேலும் பொது குழாய்களில் மிகவும் குறைவாக சொட்டு, சொட்டாக தண்ணீர் வருகிறது. அதை பிடிக்க பல மணி நேரம் காத்து கிடக்க வேண்டிய நிலை உள்ளது. கொளப்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் போதிய குடிநீர் கிணறுகளும் இல்லை. இதனால் பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
புதிய கிணறுகள்
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
கொளப்பள்ளி சுற்றுப்புற பகுதிகளில் குடிநீர் சீராக வினியோகம் செய்யப்பட்டு வந்தது. சமீப நாட்களாக குடிநீர் வினியோகிக்கப்பட வில்லை. இதனால் பெண்கள் குடங்களுடன் பொது குழாய்களில் காத்து கிடக்கின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனுக்கள் அளித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. குடிநீர் முறையாக வினியோகம் செய்ய கூடுதலாக குடிநீர் தேவைக்காக கிணறுகள் அமைக்க வேண்டும். குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள், வியாபாரிகள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே, இனிவரும் நாட்களில் சீராக குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தடையின்றி வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.