அக்னி நட்சத்திரத்துக்கு இணையான வெப்பத்தால் மக்கள் கடும் அவதி


தினத்தந்தி 7 Aug 2023 1:50 AM IST (Updated: 7 Aug 2023 2:44 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டத்தில் 104 டிகிரி வெயில் கொளுத்தியதால் அக்னி நட்சத்திரத்துக்கு இணையான வெப்பத்தால் மக்கள் கடும் அவதிப்பட்டனர்.

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டத்தில் 104 டிகிரி வெயில் கொளுத்தியதால் அக்னி நட்சத்திரத்துக்கு இணையான வெப்பத்தால் மக்கள் கடும் அவதிப்பட்டனர்.

வெயிலின் தாக்கம்

தமிழகத்தில் இந்த ஆண்டு கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக மார்ச், ஏப்ரல், மே மாதம் வரை தான் வெயிலின் தாக்கம் இருக்கும். ஆனால் தற்போது கோடை காலம் முடிந்தும் வெயிலின் தாக்கம் அதிக அளவில் காணப்படுகிறது. வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

தஞ்சை மாவட்டத்தில் கோடைகாலத்தின் தொடக்க முதலே வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. அதன்படி இந்த ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் அக்னி நட்சத்திர காலமான மே 4-ந்தேதி முதல் 28-ந்தேதி வரையிலான காலக்கட்டத்தில் அதிக பட்சமாக 105 டிகிரி வரை வெயில் கொளுத்தியது. இந்த நிலையில் வெயிலின் தாக்கத்தை குறைக்கும் வகையில் அவ்வப்போது மழையும் செய்தது. அக்னி நட்சத்திர காலம் நிறைவடைந்த பிறகு வெயிலின் தாக்கம் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அக்னிநட்சத்திரம் முடிந்த பின்னரும் அக்னி நட்சத்திர காலக்கட்டத்தில் கொளுத்தியதை போன்று வெயில் சுட்டெரித்தது

மக்கள் அவதி

தஞ்சை மாவட்டத்தில் இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகமாக வெயில் சுட்டெரிக்கிறது. இனிவரும் நாட்களில் வெப்பத்தின் தாக்கம் கூடுதலாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதனை நிருபிக்கும் வகையில் தஞ்சையில் கடந்த 1 மாதமாக வெயில் வாட்டி வதைக்கிறது. கோடை காலத்தில் இதைவிட வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். காலையில் தொடங்கும் வெயில் மாலை வரை நீடிக்கிறது. இரவிலும் வெப்பத்தின் தாக்கம் நீடிப்பதால் சரியாக தூங்க முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். மின்விசிறியில் இருந்து வரும் காற்றும் அனலாக வீசுகிறது.

இதனால் புழுக்கம் காரணமாக தூங்க முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். பகலில் வெளியே செல்ல முடியாத அளவுக்கு வெப்பம் உள்ளது. இதனால் நடந்து செல்வோர் குடைபிடித்தப்படி செல்வதை காண முடிகிறது. மோட்டார் சைக்கிளில் செல்வோர் முகத்தை துணியால் மூடியபடி செல்கின்றனர். பகல் நேரங்களில் வெயிலோடு அனல் காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர். சிலர் வெயிலில் நடந்து செல்லும்போது அசதி காரணமாக மரங்களின் நிழலை நாடி செல்கின்றனர்.

104 டிகிரி வெயில்

தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தி வருகிறது. நேற்று அதிகபட்சமாக 104 டிகிரி வரை வெயில் கொளுத்தியது. பகல்நேரத்தில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. பகல்நேரத்தில் மக்கள் நடமாட்டம் குறைவாகவே இருந்தது. தஞ்சை பெரியகோவிலில் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு வசதியாக புதிதாக தரைவிரிப்புகள் விரிக்கப்பட்டன.

தஞ்சை மாவட்டத்தில் அதிகரித்து வரும் வெயிலின் தாக்கத்தில் இருந்து சமாளிக்க இளநீர், தர்பூசணி, பதனீர், வெள்ளரி, கற்றாழை ஜூஸ் போன்றவற்றை மக்கள் அதிக அளவில் பருகி வருகின்றனர். இதன் காரணமாக தஞ்சையில் பல இடங்களில் சாலையோரங்களில் புதிதாக கடைகள் அமைத்து இளநீர், பழச்சாறு உள்ளிட்டவற்றை விற்பனை செய்து வருகின்றனர். இதேபோல் குளிர்பான கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது. வெயிலை சமாளிக்க தற்போது மழை பெய்தால் நன்றாக இருக்கும் என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.


Next Story