தீபாவளியை யொட்டி பொருட்கள் வாங்க கடைவீதியில் குவிந்த மக்கள்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொருட்கள் வாங்க கடைவீதியில் பொதுமக்கள் குவிந்தனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொருட்கள் வாங்க கடைவீதியில் பொதுமக்கள் குவிந்தனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தீபாவளி பண்டிகை
தீபாவளி பண்டிகையையொட்டி திருவண்ணாமலை நகரை சேர்ந்த மக்கள் பட்டாசு, புது துணிகள் மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக திருவண்ணாமலையில் உள்ள கடை வீதிகளில் குவிந்தனர். குறிப்பாக பட்டாசு கடைகளிலும், ஜவுளிக்கடைகளிலும் மக்களின் கூட்டம் அலைமோதியது. மேலும் திருவண்ணாமலை மாட வீதியின் சாலையோரங்களில் ஏராளமான சிறு வியாபாரிகள் தற்காலிக கடை அமைத்து உள்ளனர்.
திருவண்ணாமலை நகரில் சின்னக்கடை தெரு, திருவூடல் தெரு, கடலைக்கடை மூலை உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். இதனால் பொதுமக்கள் இருசக்கர வாகனங்களை நிறுத்த இடமின்றி கடை வீதிகள் திணறியது. இதனால் அந்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்டது. வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன. போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர்.
போக்குவரத்து மாற்றம்
கண்காணிப்பு கோபுரங்களில் பைனாகுலர் மூலம் போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் முக்கிய கடை வீதிகளில் பஸ்கள், கார்கள் செல்லாத வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.
அதுமட்டுமின்றி தீபாவளியை முன்னிட்டு வெளியூர் செல்லும் மக்களின் கூட்டமும் திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையத்தில் அதிகமாக காணப்பட்டது.