சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவுக்கு குவிந்த மக்கள்
ஐப்பசி மாதத்தின் முதல் சுபமுகூர்த்த தினமான நேற்று சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு செய்வதற்கு மக்கள் குவிந்தனர்.
ஐப்பசி சுபமுகூர்த்தம்
தமிழ் மாதங்களில் புரட்டாசியில் திருமண விழாவை நடத்துவதில் மக்கள் பெரிதும் ஆர்வம் காட்டுவது இல்லை. இதனால் கடந்த புரட்டாசி மாதத்தில் திருமண விழாக்கள் மிகவும் குறைவாகவே நடந்தன. அதேபோல் புதிதாக நிலம் வாங்குபவர்கள், நிலம் விற்பவர்களும் புரட்டாசியில் பத்திரப்பதிவு செய்வதற்கு விரும்புவது இல்லை.
இந்தநிலையில் புரட்டாசி முடிந்து நேற்று ஐப்பசி மாதம் தொடங்கியது. ஐப்பசி மாதத்தின் முதல் நாளே சுபமுகூர்த்த தினம் ஆனது. அதுமட்டுன்றி வளர்பிறை மற்றும் புதன்கிழமையாகவும் அமைந்தது. இதனால் புரட்டாசி மாதத்தில் முடிவு செய்த திருமணங்கள் நேற்று நடைபெற்றன. அதேபோல் பத்திரப்பதிவு செய்வதற்கு பலரும் ஆர்வமாக இருந்தனர்.
மக்கள் குவிந்தனர்
இதையொட்டி சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன் வழங்கவும் உத்தரவிடப்பட்டது. இதில், திண்டுக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட பதிவாளர் அலுவலகம் செயல்படுகிறது. இங்கு ஒரு சார்பதிவாளர் அலுவலகமும், 2 இணை சார்பதிவாளர் அலுவலகங்களும் இயங்குகின்றன.
இந்த 3 அலுவலகங்களிலும் வழக்கமாக 60 முதல் 80 பத்திரப்பதிவுகள் நடைபெறுவது வழக்கம். ஆனால் நேற்றைய தினம் 135 பேர் பத்திரப்பதிவு செய்தனர். இதற்காக இருதரப்பை சேர்ந்த மக்களும் அங்கு குவிந்தனர். இதனால் சார்பதிவாளர் அலுவலகங்கள் பரபரப்பாக இயங்கின. மேலும் மாலை வரை பத்திரப்பதிவுக்காக அலுவலக வளாகத்தில் மக்கள் காத்திருந்தனர்.
அதிலும் ஒருசிலர் மதிய வேளைக்கு முன்பும், மாலை 3 மணிக்கு பின்னரும் பத்திரப்பதிவு செய்வதற்கு விரும்பி டோக்கன் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் நேற்று மக்கள் குவிந்ததால், மாலை வரை பத்திரப்பதிவு நடைபெற்றது.