முழுநேரமும் டாக்டர்கள் பணியில் இல்லாததால் கிராம மக்கள் அவதி


முழுநேரமும் டாக்டர்கள் பணியில் இல்லாததால் கிராம மக்கள் அவதி
x

பூம்புகார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முழுநேரமும் டாக்டர்கள் பணியில் இல்லாததால் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். இதை அதிகாரிகள் கவனித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

மயிலாடுதுறை

பூம்புகார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முழுநேரமும் டாக்டர்கள் பணியில் இல்லாததால் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். இதை அதிகாரிகள் கவனித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

ஆரம்ப சுகாதார நிலையம்

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் தர்மகுளம் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இதன் மூலம் பூம்புகார், காவேரிபூம்பட்டினம், வானகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பலன் அடைந்து வருகின்றனர்.

கடந்த சில மாதங்களாக இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேரங்களில் டாக்டர்கள் பணியில் இருப்பதில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகிறார்கள்.

சிகிச்சை பெற முடியவில்லை

இரவு நேரங்களில் திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்படும் மக்கள், இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற முடியாத சூழல் உள்ளது. இதனால் பல கிலோ மீட்டர் தூரம் பயணித்து சீர்காழி, மயிலாடுதுறை ஆகிய இடங்களுக்கு சென்று அங்கு உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற வேண்டி உள்ளது. இதனால் கூடுதல் செலவும் ஏற்படுவதாக கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் கூறுகையில், 'பூம்புகார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேரங்களில் டாக்டர்கள் பணியில் இல்லாதது மிகவும் சிரமத்தை தருகிறது. கடந்த சில வாரங்களாக பகலில் கூட டாக்டர்கள் மற்றும் பணியாளர்கள் இருப்பதில்லை. காலை 10 மணிக்கு தான் டாக்டர்கள், செவிலியர்கள் பணிக்கு வருகின்றனர்.

நடவடிக்கை

இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து பூம்புகார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முழுநேரமும் மக்கள் சிகிச்சை பெறும் வகையில் டாக்டர்களை பணியில் இருக்கச்செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கிராம மக்கள் கூறினர்.


Next Story