திண்டுக்கல் வந்த வந்தே பாரத் ரெயிலை ஆர்வமுடன் பார்த்த மக்கள்
சோதனை ஓட்டமாக 2-வது நாளாக திண்டுக்கல்லுக்கு வந்த, வந்தே பாரத் ரெயிலை மக்கள் ஆர்வமுடன் பார்த்தனர்.
சோதனை ஓட்டமாக 2-வது நாளாக திண்டுக்கல்லுக்கு வந்த, வந்தே பாரத் ரெயிலை மக்கள் ஆர்வமுடன் பார்த்தனர்.
வந்தே பாரத் ரெயில்
சென்னை-நெல்லை இடையே நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய ஊர்களில் நின்று செல்கிறது. சென்னையில் இருந்து வரும்போது இரவு 7.55 மணிக்கும், நெல்லையில் இருந்து வரும்போது காலை 8.40 மணிக்கும் திண்டுக்கல்லுக்கு வந்தே பாரத் ரெயில் வருகிறது.
இதற்கிடையே சென்னை-நெல்லை இடையே நேற்று முன்தினம் வந்தே பாரத் ரெயிலை இயக்கி சோதனை செய்யப்பட்டது. அப்போது திண்டுக்கல் உள்பட அனைத்து ஊர்களிலும் வந்தே பாரத் ரெயிலை மக்கள் ஆர்வமுடன் பார்த்து சென்றனர். இதற்கிடையே நேற்றும் நெல்லையில் இருந்து சென்னைக்கு வந்தே பாரத் ரெயிலை இயக்கி சோதனை நடத்தப்பட்டது.
மக்கள் ஆர்வம்
இதையொட்டி காலை 6 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு வந்தே பாரத் ரெயில் காலை 8.50 மணிக்கு திண்டுக்கல் ரெயில் நிலையத்துக்கு வந்தது. திண்டுக்கல்லில் 2-வது நடை மேடையில் அந்த ரெயில் நிறுத்தப்பட்டது. இதையொட்டி ரெயில்வே அதிகாரிகள், பாதுகாப்பு படையினர் ரெயிலை பார்வையிட்டனர். அதேபோல் ரெயிலில் வந்த அதிகாரிகள், இறங்கி நடைமேடையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அதேநேரம் பிற ரெயில்களில் செல்வதற்கு காத்திருந்த பயணிகள், ரெயில் நிலையத்துக்கு வெளியே நின்ற மக்கள் வந்தே பாரத் ரெயிலை ஆர்வமுடன் பார்த்தனர். மேலும் பெண்கள் உள்பட அனைவரும் ரெயிலுடன் நின்று 'செல்பி' எடுத்தனர். அதேபோல் செல்போனில் வந்தே பாரத் ரெயிலை புகைப்படம், வீடியோ எடுத்தனர். இதையடுத்து 8.52 மணிக்கு திண்டுக்கல்லில் இருந்து சென்னைக்கு வந்தே பாரத் ரெயில் புறப்பட்டு சென்றது. அதிவேகத்தில் வந்து மின்னல் வேகத்தில் புறப்பட்டு சென்ற வந்தே பாரத் ரெயிலை அனைவரும் ஆச்சரியமாக பார்த்தனர்.