பட்டா இருந்தும் வீடு கட்ட முடியாமல் தவிக்கும் மக்கள்மாற்று இடம் கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு
பட்டா இருந்தும் வீடு கட்ட முடியாமல் தவிக்கும் மக்கள் மாற்று இடம் கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனா்.
கடலூர் மாவட்டம் மந்தாரக்குப்பம் பகுதியை சேர்ந்த இந்து மலை குறவன் சமூகத்தினர் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு ஆதார் கார்டு, ரேஷன் கார்டு உள்ளிட்ட அடையாள அட்டைகளை ஒப்படைக்க திரண்டு வந்தனர். அப்போது மாவட்ட கலெக்டர் இல்லாததால், அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
மந்தாரக்குப்பம் பஸ் நிலையம் அருகில் குடியிருந்த இந்து மலை குறவன் சமுதாயத்தை சேர்ந்த சுமார் 40 குடும்பத்தினர், என்.எல்.சி. நிறுவனத்தின் நில எடுப்பால் வீடு இன்றி தவித்து வருகிறோம். இதையடுத்து கடந்த ஓராண்டுக்கு முன்பு சிதம்பரம் தாலுகா கூடுவெளிசாவடியில் 40 குடும்பத்தினருக்கும் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. ஆனால் அங்கு வீடு கட்ட முயன்றால், ஏற்கனவே கூடுவெளிசாவடியில் வசிக்கும் மக்கள் எங்களை வீடு கட்ட விடாமல், தகராறில் ஈடுபட்டு வருகின்றனர். பட்டா இருந்தும், அந்த இடத்தில் எங்களால் வீடு கட்டி வசிக்க முடியவில்லை. அதனால் எங்களுக்கு விருத்தாசலம் தாலுகாவிலேயே மாற்று இடம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
பின்னர் அவர்கள், எங்களுக்கு மாற்று இடம் வழங்கவில்லையெனில் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பட்டா ஆகியவற்றை ஒப்படைத்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறி விட்டு கலைந்து சென்றனர்.