ரெயில்வே மேம்பாலம் அமைக்கக்கோரி போராட்டம் நடத்திய பொதுமக்கள்
திங்கள்சந்தை அருகே ரெயில்வே மேம்பாலம் அமைக்கக்கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.
திங்கள்சந்தை:
திங்கள்சந்தை அருகே ரெயில்வே மேம்பாலம் அமைக்கக்கோரி பொதுமக்கள் ேபாராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.
ரெயில்வே மேம்பாலம்
திங்கள்சந்தை அருகே உள்ள நெய்யூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கொக்கோடு பகுதி வழியாக ரெயில் தண்டவாளம் செல்கிறது. இங்கு கொக்கோடு, பரம்பை, கண்ணோடு போன்ற பகுதிகளில் இருந்து சரல்விளை, பாளையம், பழவண்டான்கோணம் ஆகிய ஊர்களுக்கு செல்ல தண்டவாளத்தின் குறுக்கே ரெயில்வே மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என அந்த பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இதுதொடர்பாக மாவட்ட கலெக்டருக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் பல ஆண்டுகளாக கோரிக்கை மனுக்கள் அனுப்பி வருகிறார்கள். ஆனால் இதுதொடர்பாக அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
போராட்டம்
இந்த நிலையில் நேற்று காலையில் நெய்யூர் பேரூராட்சி தலைவர் பிரதீபா, வார்டு கவுன்சிலர்கள் ராஜகலா, ஹரிதாஸ் மற்றும் ஜெகன் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ெகாக்கோடு பகுதியில் குவிந்தனர். அவர்கள் ரெயில்வே மேம்பாலம் அமைக்க கோரி போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த இரணியல் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமார், சப்-இன்ஸ்பெக்டர் முத்து கிருஷ்ணன் மற்றும் போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது புதிய மேம்பாலம் கட்டுவது குறித்து ரெயில்வே உயர் அதிகாரிகளிடம் மனு அளித்து தீர்வு காண போலீசார் அறிவுறுத்தினர். இதனையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.