மரத்தை நிழற்குடையாக பயன்படுத்தும் பொதுமக்கள்


மரத்தை நிழற்குடையாக பயன்படுத்தும் பொதுமக்கள்
x

மரத்தை நிழற்குடையாக பயன்படுத்தும் பொதுமக்கள்

திருவாரூர்

திருவாரூர் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால் மரத்தை நிழற்குடையாக பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். எனவே இருக்கை வசதியுடன் கூடிய நிழற்குடை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி

திருவாரூர் கலெக்டர் அலுவலகம் பின்னால் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரிக்கு திருவாரூர் மட்டுமின்றி நாகை, மயிலாடுதுறை, மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

நோயாளிகளை பார்த்து நலம் விசாரிக்கவும் பலர் வந்து செல்வது உண்டு. நோயாளிகள், அவர்களை பார்க்க வருபவர்களின் தாகத்தை போக்க குடிநீர் குழாய் வைக்கப்பட்டுள்ளது. உள்நோயாளிகள் பிரிவு செயல்படும் புதிய கட்டிடத்தின் எதிரிலும், புற நோயாளிகள் பிரிவு கட்டிடத்தின் அருகேயும் குடிநீர் குழாய் உள்ளது.

பஸ்சிற்காக காத்திருப்பு

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்களை பார்க்க வருபவர்கள் பெரும்பாலும் தங்களது மோட்டார் சைக்கிள்கள், மொபட்டுகள், கார்கள் போன்றவற்றில் வருகின்றனர். ஆனால் பெரும்பாலான பொதுமக்கள் அரசு பஸ்களில் மட்டுமே சென்று வருகின்றனர். இதற்காக மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு என்று திருவாரூர் பஸ் நிலையத்திலிருந்து டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி வளாகத்தில், பொதுமக்கள் வசதிக்காக இருக்கை வசதி மற்றும் நிழற்குடை இல்லை. இதனால் அவர்கள் மழை மற்றும் வெயில் காலங்களில் மிகவும் அவதியடைந்து வருகின்றனர்.

இருக்கை வசதியுடன் நிழற்குடை

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்,

திருவாரூர் மருத்துவக்கல்லூரிக்கு தொலைதூரங்களில் இருந்து பஸ்களில் வருகிறோம். மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் இருக்கை வசதியுடன் கூடிய நிழற்குடை இல்லாததால் மழைக்காலங்களில் மழையில் நனைந்து கொண்டும், வெயிலில் நின்று கொண்டும் பஸ் ஏறி பயணித்து வருகிறோம். ஆஸ்பத்திரியில் வளாகம் மற்றும் நுழைவு வாயிலில் உள்ள ஒரு மரத்தின் நிழலை தான் நிழற்குடையாக பயன்படுத்தி வருகிறோம்.

மருத்துவக்கல்லூரி வளாகத்தில் பல்வேறு திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், டவுன் பஸ்கள் நிற்கும் இடத்தில் இருக்கை வசதியுடன் கூடிய நிழற்குடை அமைத்து தர வேண்டும். உரிய நேரத்திற்கு பஸ்கள் இயக்கப்படாததால் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story