தி.மு.க.வுக்கு மக்கள் நிச்சயம் பாடம் புகட்டுவார்கள் -அண்ணாமலை அறிக்கை
அறவழி விழிப்புணர்வு போராட்டங்கள் மூலம் தி.மு.க.வுக்கு மக்கள் நிச்சயம் பாடம் புகட்டுவார்கள் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னை,
ஆ.ராசா எம்.பி. கண்ணியமற்ற முறையில் தமிழ் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் ஆபாசமாக பேசியது குறித்து மொத்த தமிழகமும் கொந்தளித்துக்கொண்டிருக்கும் வேளையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் பொதுவான முதல்-அமைச்சராக இருப்பவர் தொடர் மவுனம் சாதிப்பது பிரித்தாளும் சதியாக பார்க்கப்படுகிறது.
ஆ.ராசாவின் பேச்சை உங்கள் மவுனம் ஆதரிக்கிறதா? திராவிட மாடலை முன்னெடுக்க, தமிழர் அடையாளத்தை அழிக்க எடுக்கும் முயற்சி தானே ஆ.ராசாவின் பேச்சு. அவரது நோக்கம் தமிழரைப் பிளவுப்படுத்தி, திராவிடத்தை நிலைநிறுத்தி, மதமாற்றத்திற்கு பாதை அமைத்துத்தருவதுதான் என்பது மறைக்க முடியாத, மறுக்க முடியாத உண்மை. தி.மு.க.வின் கடந்த கால வரலாற்றை புரட்டி பார்த்தால் இது வெளிப்படையாக தெரியும்
போராட்டம் வெற்றி
திராவிடத்தை எதிர்த்து நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் நடத்தப்பட்ட கடையடைப்பு போராட்டம் பெரும் வெற்றி பெற்றுள்ளது. தங்களைத் தட்டிக்கேட்க யாரும் இல்லை என்ற எண்ணத்தில் தலைக்கனத்துடன் பொய் வழக்குகள் மூலம் எடுக்கப்படும் தமிழக அரசின் கைது நடவடிக்கைகளை மத்திய அரசும் கவனித்துக்கொண்டிருக்கிறது
தமிழ் மக்களுக்காக, அவர்களின் தன்மானத்திற்காக, உரிமைக்காக குரல் கொடுக்கும் பா.ஜ.க. தொண்டர்களை கைது செய்வதை மத்திய அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காது என்பதை காவல் துறையும், தலைக்கனத்துடன் நடவடிக்கை எடுக்கும் தமிழக அரசும் புரிந்து கொள்ள வேண்டும். 26-ந் தேதி கோவையில் பா.ஜ.க. தொடங்கும் அறவழி விழிப்புணர்வு போராட்டங்கள் மூலம் மக்கள், தி.மு.க.வுக்கு நிச்சயம் பாடம் புகட்டுவார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.