பா.ஜ.க.வுக்கு தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்: காங்கிரஸ்
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் அதிக எண்ணிக்கையில் போட்டியிடும் என்று புதிதாக பொறுப்பேற்றுள்ள சட்டசபை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. கூறினார்.
நாகர்கோவில்,
தமிழக சட்டசபை காங்கிரஸ் தலைவராக இருந்த செல்வப் பெருந்தகை காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ.வுக்கு சட்டசபை காங்கிரஸ் தலைவர் பதவி வழங்கப்பட்டது. ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக நடக்கிறது. தொண்டர்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் காங்கிரஸ் அதிக எண்ணிக்கையில் போட்டியிடும். விளவங்கோடு தொகுதி காங்கிரசின் கோட்டை. அங்கு காங்கிரசை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பார்கள். கடந்த 10 ஆண்டுகளாக பா.ஜ.க. கொல்லைப்புறம் வழியாக ஆட்களை பிடிக்கும் பணிகளை செய்து வருகிறது. வட மாநிலங்களில் குதிரை பேரம் பேசி மாற்றுக் கட்சியினரை பா.ஜ.க. இழுத்து வருகிறது. இதற்கு தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்" என்றார்.