குறைகேட்பு கூட்டத்துக்கு பட்டை நாமம் அணிந்து மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளிகள்


குறைகேட்பு கூட்டத்துக்கு பட்டை நாமம் அணிந்து மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளிகள்
x

குறைகேட்பு கூட்டத்துக்கு பட்டை நாமம் அணிந்து மாற்றுத்திறனாளிகள் மனு அளிக்க வந்தனர்.

கடலூர்

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி, மாற்றுத்திறனாளிகளிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார். அப்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த 200-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் தங்கள் கோரிக்கை தொடர்பான மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர். மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர், அதன் மீது உரிய தீர்வு காண அந்தந்த துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

அப்போது மாற்றுத்திறனாளிகள் புதுவாழ்வு நலச்சங்கத்தினர் மாவட்ட தலைவர் பொன்.சண்முகம் தலைமையில் பட்டை நாமம் அணிந்து கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அவர்கள் கலெக்டர் பாலசுப்பிரமணியத்தை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை தாலுகா அலுவலகம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த 2 மாதங்களாக பல்வேறு மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படவில்லை. இதுபற்றி கேட்டால் அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழித்து வருகின்றனர். ஆகவே வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் எங்களுக்கு உதவித்தொகை கிடைக்க உடனடி தீர்வு காண வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.


Next Story