அரசு நலத்திட்டங்களை பெற்று மாற்றுத்திறனாளிகள் பயன்பெறலாம்
விழுப்புரம் மாவட்டத்தில் அரசு நலத்திட்டங்களை பெற்று மாற்றுத்திறனாளிகள் பயன்பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக முதல்-அமைச்சர், மாற்றுத்திறனாளிகளின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறார். சிறப்பு மருத்துவ முகாம் போன்ற திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார். தற்போது புதிய திட்டமாக முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.99,777 மதிப்பில் இணைப்பு சக்கரம் பொருத்திய பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இலவச பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்படுகிறது.
விழுப்புரம் மாவட்டத்திற்கு கடந்த ஏப்ரல் மாதம் 5-ந் தேதி தமிழக முதல்-அமைச்சர் வருகை தந்தபோது முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட 61 பேருக்கு இலவசமாக இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட இலவச பெட்ரோல் ஸ்கூட்டர் ரூ.60,86,397 மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற பாதிப்புகள் உள்ளவர்களுக்கு ஸ்கூட்டர் தேவைப்பட்டால் உடனடியாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம். அதுமட்டுமின்றி பொதுவாக மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி, கை மிதிவண்டி, இலவச பஸ் பயண அட்டை, மாதாந்திர உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, அதிகளவு உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் பராமரிப்பு உதவித்தொகை, செயற்கை கால், ஊன்றுகோல், பிரெய்லி கடிகாரம், பார்வையற்றவர்களுக்கு செல்போன் உள்பட பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
மாற்றுத்திறனாளிகள் பயன்பெறலாம்
படித்த மாற்றுத்திறனாளிகளுக்கு சுயதொழில் தொடங்குவதற்கு தேவையான தொழிற்பயிற்சி மற்றும் வங்கி கடனுதவிகள் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. எனவே மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அரசின் திட்டங்களை பெற்று பயன்பெறலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.