மாற்றுத்திறனாளிகள் தங்கள் குறைகளை செல்போன் மூலம் தெரிவிக்கலாம் கலெக்டர் ஷ்ரவன் குமார் தகவல்


மாற்றுத்திறனாளிகள் தங்கள் குறைகளை செல்போன் மூலம் தெரிவிக்கலாம்  கலெக்டர் ஷ்ரவன் குமார் தகவல்
x

மாற்றுத்திறனாளிகள் தங்கள் குறைகளை செல்போன் மூலம் தெரிவிக்கலாம் என கலெக்டர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகள் மாதாந்திர உதவித்தொகை, பெட்ரோல் ஸ்கூட்டர்கள், செல்போன், வங்கி கடன்கள், இலவச பேருந்து பயணம், அரசுப்பணி கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான 97 மனுக்களை அளித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் ஷ்ரவன் குமார், இந்த மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து 22 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.11 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஷ்ரவன் குமார் வழங்கினார். மேலும் மாநில அளவில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான பளு தூக்கும் போட்டியில் தங்கம் வென்ற மாற்றுத்திறனாளிக்கு பாராட்டு கேடயம் வழங்கப்பட்டது.

கூட்டத்தில் கலெக்டர் ஷ்ரவன்குமார் பேசுகையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் நலன் கருதி அவர்களின் குறைகளை தீர்ப்பதற்கும், குறைகள் தொடர்பான மனுக்கள் பெறுவதற்கும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேகமான செல்போன் எண் 95970 21141 உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செல்போன் எண் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும். இதில் மாற்றுத்திறனாளிகள் தங்கள் கோரிக்கை மற்றும் புகார்களை தொடர்பான கோரிக்கைகளை தொலைபேசி வாயிலாகவும், வாட்ஸ் ஆப் மூலமாக தெரிவிக்கலாம் என்றார். கூட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்பிரமணி, மாற்றுத்திறனாளிகள் நல சங்கங்கள் மற்றும் அரசு அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.


Next Story