மக்கள் நீதிமன்றத்தில் 3,832 வழக்குகளுக்கு தீர்வு


மக்கள் நீதிமன்றத்தில்  3,832 வழக்குகளுக்கு தீர்வு
x

சேலம் உள்பட 5 இடங்களில் நடந்த மக்கள் நீதிமன்றம் மூலம் 3,832 வழக்குகளுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.

சேலம்

சேலம் உள்பட 5 இடங்களில் நடந்த மக்கள் நீதிமன்றம் மூலம் 3,832 வழக்குகளுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.

மக்கள் நீதிமன்றம்

சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெற்றது. மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான தங்கராஜ், முதலாவது முன்சீப் மாவட்ட நீதிபதி சதீஸ்குமார், 2-வது முன்சீப் மாவட்ட நீதிபதி தீனதயாளன், குடும்ப நல கோர்ட்டு நீதிபதி ஜெயஸ்ரீ, சார்பு நீதிபதி ரேணுகாதேவி உள்பட நீதிபதிகள், ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டுகள், மூத்த வக்கீல்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து 7 பெஞ்ச் அமைக்கப்பட்டு அங்கு சமரசம் செய்து கொள்ளும் வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. குற்றவியல் வழக்குகள், காசோலை வழக்கு, வங்கி கடன், கல்வி கடன் தொடர்பான வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், குடும்ப வழக்கு, உரிமையியல் வழக்கு, தொழிலாளர் நல வழக்கு உள்பட மாவட்டம் முழுவதும் மொத்தம் 7,459 வழக்குகள் நேற்று நடந்த மக்கள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. முடிவில், 3,832 வழக்குகளுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. இதன்மூலம் ரூ.20 கோடியே 24 லட்சம் தொகை பைசல் செய்யப்பட்டது.

ரூ.14 லட்சம் இழப்பீடு

சேலம் மாவட்டம் ராஜாபாளையம் பகுதியை சேர்ந்தவர் துரைசாமி (வயது 49). இவர், பட்டு நெசவு தறி தொழில் செய்து வந்தார். கடந்த ஆண்டு மே மாதம் 25-ந் தேதி ஆர்.பெத்தாம்பட்டி பிரிவு ரோட்டில் நின்றபோது, திருச்செங்கோட்டில் இருந்து சேலம் நோக்கி வந்த கார் அவர் மீது மோதியது. இந்த விபத்தில் துரைசாமி உயிரிழந்தார். இதனால் அவரது மனைவி சுமதி மற்றும் குடும்பத்தினர் ரூ.50 லட்சம் இழப்பீடு கேட்டு சேலம் மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாயம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நேற்று நடந்த மக்கள் நீதிமன்றத்தில் சமரசம் செய்து துரைசாமியின் குடும்பத்தினருக்கு ரூ.14 லட்சம் இழப்பீடு வழங்க நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து இழப்பீடு தொகைக்கான காசோலையை மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி, மோட்டார் வாகன விபத்து கோர்ட்டு நீதிபதி தாண்டவன் ஆகியோர் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரிடம் வழங்கினர்.

சங்ககிரி-ஆத்தூர்

இதேபோல், சங்ககிரி தேவகவுண்டனூரை சேர்ந்த பழனிசாமி (51) என்பவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததால் நேற்று நடந்த மக்கள் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. முடிவில், இறந்த பழனிசாமியின் குடும்பத்தினருக்கு நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் ரூ.10 லட்சத்திற்கான காசோலை வழங்கியது.

சேலத்தை தொடர்ந்து சங்ககிரி, ஆத்தூர், மேட்டூர் மற்றும் ஓமலூரில் உள்ள கோர்ட்டுகளிலும் நேற்று நீதிபதிகள் முன்னிலையில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.


Next Story