மக்கள் நீதிமன்றத்தில் ரூ.8 கோடியே 71 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு


மக்கள் நீதிமன்றத்தில் ரூ.8 கோடியே 71 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
x

வேலூர் மாவட்டத்தில் 9 கோர்ட்டுகளில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 157 வழக்குகளில் ரூ.8 கோடியே 71 லட்சத்து 59 ஆயிரத்து 154-ஐ இழப்பீடு தொகையாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் 9 கோர்ட்டுகளில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 157 வழக்குகளில் ரூ.8 கோடியே 71 லட்சத்து 59 ஆயிரத்து 154-ஐ இழப்பீடு தொகையாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மக்கள் நீதிமன்றம்

தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் (லோக்அதாலத்) வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்றது.

வேலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியுமான (பொறுப்பு) சாந்தி தலைமை தாங்கினார்.

இதில் கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் பணியின்போது வேலூர் வடக்கு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மாலதி எதிர்பாராத விதமாக லாரி மோதி உயிரிழந்தார்.

இதுதொடர்பான விசாரணை வேலூர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு மக்கள் நீதிமன்றத்தில் எடுத்து கொள்ளப்பட்டு இன்று தீர்வு காணப்பட்டது.

இதையடுத்து மாலதி குடும்பத்தினரிடம் விபத்து இழப்பீட்டு தொகை ரூ.72 லட்சத்துக்கான காசோலையை முதன்மை அமர்வு நீதிபதி சாந்தி வழங்கினார். அப்போது வேலூர் உதவி கலெக்டர் கவிதா மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள், வக்கீல்கள் பலர் உடனிருந்தனர்.

ரூ.8 கோடியே 71 லட்சம் இழப்பீடு

அதைத்தொடர்ந்து நடந்த மக்கள் நீதிமன்றத்தில் வாகன விபத்து, வங்கி வராக்கடன், நிலமோசடி, தொழிலாளர் வழக்கு, குடும்பநல வழக்கு, காசோலை மோசடி உள்பட பல்வேறு வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள 9 கோர்ட்டுகளில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 3,106 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன.

அவற்றில் 157 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன. அதன்மூலம் ரூ.8 கோடியே 71 லட்சத்து 59 ஆயிரத்து 154-ஐ இழப்பீடாக சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்க உத்தரவிடப்பட்டது.

மக்கள் நீதிமன்றத்தில் மாவட்ட நீதிபதிகள், வக்கீல்கள், காப்பீட்டு நிறுவன அதிகாரிகள், வருவாய்த்துறை அலுவலர்கள், வங்கி அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாட்டை வேலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு நிர்வாகம் செய்திருந்தது.


Next Story