போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்
நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது.
நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது.
குறைதீர்க்கும் முகாம்
நெல்லை மாவட்ட போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று காலையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன் (கிழக்கு) தலைமை தாங்கினார். முகாமில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். அவர்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன், புகார் மனு குறித்து விசாரணை நடத்தினார். தொடர்ந்து சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இந்த கூட்டத்தில் மொத்தம் 20 புகார் மனுக்கள் பெறப்பட்டன.
அதே போல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்த முகாமிற்கு போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மாரிராஜன் மற்றும் போலீசார் முன்னிலை வகித்தனர். இந்த முகாமில் 27 மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
காதல் திருமணம்
நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பணியாற்றும் பெண் காவலரின் கணவர் மதன் என்பவர் குறைதீர்க்கும் முகாமில் கலந்து கொண்டு மனு கொடுத்தார். அதில் 4 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்த நாங்கள் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகிறோம். எங்களை சேர்த்து வைக்க வேண்டும் என்று கூறி இருந்தார். இதனால் பெண் காவலரை வரவழைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மதன், தன்னுடன் சேர்ந்து வாழ அழைத்து அந்த பெண் காவலர் காலில் விழுந்து கெஞ்சியுள்ளார். இருந்தாலும் அவர் மறுத்துவிட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.