மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
மயிலாடுதுறையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் 198 மனுக்கள் பெறப்பட்டன
மயிலாடுதுறை கலெக்டர் கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் லலிதா தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல், வேலைவாய்ப்பு, முதியோர், மாற்றுத்திறனாளிகள், விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பொதுமக்களிடம் இருந்து 198 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்களை கலெக்டர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். முன்னதாக சமூக நலத் துறையின் சார்பில் 4 நபர்களுக்கு முதல்-அமைச்சரின் 2 பெண் குழந்தைகளுக்கான முதிர்வு தொகை ரூ.1 லட்சத்து 58 ஆயிரத்து 460-க்கான காசோலையினையும், செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியம் நல்லாடை கிராம ஊராட்சி செயலாளராக பணிபுரிந்த செல்வகுமார் பணியின் போது இறந்ததையடுத்து வாரிசுதாரரான அவரின் மகன் பிரகாஷ் என்பவருக்கு கருணை அடிப்படையில் ஊரக வளர்ச்சி துறையில் இளநிலை உதவியாளர் பணிநியமன ஆணையையும் கலெக்டர் வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், மாவட்ட ஊரக வளர்ச்சி துறை இணை இயக்குனர் ஸ்ரீலேகா, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) கண்மணி மற்றும் அனைத்துதுறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.