மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில்321 மனுக்கள் குவிந்தன
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 321 மனுக்கள் குவிந்தன.
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமை தாங்கினார். கூட்டத்தில் மொத்தம் 321 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். மேலும், இக்கூட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 5 பேருக்கு வன உரிமை பட்டா, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் ஒரு பயனாளிக்கு மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவு ஆகியவற்றை கலெக்டர் வழங்கினார்.
கூட்டத்தில், வீரபாண்டியை சேர்ந்த செல்வக்குமார் தனது தாயார் மற்றும் சிலருடன் வந்து கொடுத்த மனுவில், 'எனது தந்தை கணேசன் வீரபாண்டியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கடையில் பூ வியாபாரம் செய்து வந்தார். இந்த கடையை உள்வாடகைக்கு விட்டதாக பொய்யான காரணம் கூறி கடைக்கு அறநிலையத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். தற்போது சீலை உடைத்து வேறு நபருக்கு கடையை கொடுத்துள்ளனர். எனவே, நாங்கள் செலுத்திய ரசீதுகளை ஆராய்ந்து மீண்டும் எங்களிடம் கடையை கொடுத்து பிழைப்பு நடத்த உதவி செய்யுங்கள்' என்று கூறியிருந்தார்.
குள்ளப்புரம் பூதிப்புரத்தை சேர்ந்த கேரளபுத்திரன் கொடுத்த மனுவில், 'ஆதிப்பட்டி-பூதிப்புரம் சாலை மோசமாக உள்ளது. கலெக்டரோ, முதல்-அமைச்சரோ எங்கள் ஊருக்கு வந்தால் தான் எங்களுக்கு விடிவுகாலம் பிறக்கும்' என்று கூறியிருந்தார். இதேபோல் ஏ.வாடிப்பட்டியை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் தனது கோரிக்கை குறித்து மனு கொடுத்தார்.