மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் தன்னார்வ அமைப்புக்கு 'பசுமை சாம்பியன்' விருது:கலெக்டர் வழங்கினார்
தேனியில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் தன்னார்வ அமைப்புக்கு பசுமை சாம்பியன் விருதை கலெக்டர் வழங்கினார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு சிறந்த பங்களிப்பை செய்து வரும் தனிநபர்கள், தன்னார்வ அமைப்புகள் மற்றும் நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சத்துடன் கூடிய 'பசுமை சாம்பியன்' விருது வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் 100 பேருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு இதற்கான திட்டம் தொடங்கப்பட்டது. 2-வது ஆண்டாக பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. தேனி மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான பசுமை சாம்பியன் விருது கூடலூரை சேர்ந்த சோலைக்குள் கூடல் தன்னார்வ அமைப்புக்கும், ஆண்டிப்பட்டி பேரூராட்சிக்கும் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, சுற்றுச்சூழல் மற்றும் மாசுகட்டுப்பாட்டு வாரியம் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினமான நேற்று மாநிலம் முழுவதும் அந்தந்த மாவட்டங்களில் இந்த விருது வழங்கப்பட்டது. தேனி மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தின் போது, இந்த விருதுகள் வழங்கப்பட்டன. தன்னார்வ அமைப்பை சேர்ந்தவர்களுக்கும், ஆண்டிப்பட்டி பேரூராட்சி நிர்வாகத்துக்கும் விருது மற்றும் ரூ.1 லட்சத்துக்கான காசோலையை கலெக்டர் ஷஜீவனா வழங்கி பாராட்டினார். முன்னதாக, கலெக்டர் அலுவலக வளாகத்தில் விருது பெற்ற தன்னார்வலர்கள் மரக்கன்றுகளை நடவு செய்தனர். அந்த பணியை மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி தொடங்கி வைத்தார். அப்போது மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் பழனிச்சாமி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.