கல்குவாரிக்கு தடை விதிக்க கோரி கலெக்டரிடம் மக்கள் மனு


கல்குவாரிக்கு தடை விதிக்க கோரி கலெக்டரிடம் மக்கள் மனு
x
தினத்தந்தி 15 Nov 2022 12:15 AM IST (Updated: 15 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆலங்குளம் அருகே கல்குவாரிக்கு தடை விதிக்க வேண்டும் என்று குறை தீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் மக்கள் மனு கொடுத்தனர்.

தென்காசி

தென்காசி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் ஆகாஷ் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார். கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 329 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

அச்சம்பட்டி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த பாலமுருகன் என்பவர் சிலருடன் வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:- எங்களது கிராமத்தில் இருந்து 1.5 கி.மீ. தொலைவில் உள்ள அருணாச்சலபுரம் கிராமத்தில் சமீபத்தில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடை மூடப்பட்டு உள்ளது. நாங்கள் மதுபானம் வாங்க வேண்டுமானால் சுமார் 15 கி.மீ. பயணம் செய்ய வேண்டி இருந்தது. இதனால் வீண் செலவு, காலவிரயம், மனஉளைச்சல் போன்றவை ஏற்பட்டது. சமீபத்தில் திறக்கப்பட்ட இந்த கடையால் அவை அனைத்தும் தவிர்க்கப்பட்டது. எனவே மூடப்பட்ட டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆலங்குளம் தாலுகா சொக்கலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கொடுத்துள்ள மனுவில், ஏ.பி.நாடானூர் கிராமத்துக்கு உட்பட்ட சொக்கலிங்கபுரம் ஊரில் நடந்து வரும் கல்குவாரியில் மீண்டும் பாறை உடைக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதனால் 5 கிராமங்களுக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. வீடுகளில் விரிசல் ஏற்படுகிறது. எனவே இந்த கல்குவாரியை நடத்த தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் செவல்விளை 3-வது தெருவை சேர்ந்த கிருஷ்ணம்மாள் (வயது 85) என்பவர் கொடுத்துள்ள மனுவில், தனது இரு மகள்கள் தன்னை ஏமாற்றியும், வஞ்சகமாகவும் தனது பெயரில் வாங்கிய வீட்டுமனையை தங்களது பெயருக்கு மாற்றி தன்னை பராமரிக்க கூட செய்யாமல் நடுத்தெருவில் விட்டதால் அந்த ஆவணங்களை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி உள்ளார்.

கூட்டத்தில் தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரியத்தின் மூலம் பயனாளிகள் 107 பேருக்கு நலவாரிய உறுப்பினர் அடையாள அட்டைகளை கலெக்டர் ஆகாஷ் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயினுலாப்தீன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் முத்துமாதவன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் குணசேகரன், மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் கந்தசாமி, உதவி ஆணையர் (கலால்) ராஜமனோகரன், தாட்கோ மேலாளர் சுந்தர்ராஜன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story