ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற மக்கள் அதிகாரம் அமைப்பினர் 3 பேர் கைது
ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற மக்கள் அதிகாரம் அமைப்பினர் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் பூட்டை அகற்றி அனைத்து மக்களும் சமமாக வழிபட உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதி தீண்டாமையை ஆதரிக்கும் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். ஆதிக்க சாதி சங்கங்களை தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட மக்கள் அதிகாரம் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்துக்கு நேற்று காலை வந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மக்கள் அதிகாரம் அமைப்பினரிடம் ஆர்ப்பாட்டம் நடத்த போலீஸ் நிலையத்தில் உரிய அனுமதி பெறவில்லை என்றும், ஆர்ப்பாட்டம் நடத்தினால் கைது செய்யப்படுவீர்கள், கலைந்து செல்லுங்கள் என்றும் கூறினர். ஆனால் மக்கள் அதிகாரம் அமைப்பினர் கலைந்து செல்லாமல் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றனர். இதையடுத்து போலீசார் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்ட செயலாளர் முத்துக்குமார் என்ற காவேரி நாடான், அந்த அமைப்பை சேர்ந்த ஜேம்ஸ் அலெக்ஸ்ராஜ், சேகர் ஆகிய 3 பேரை கைது செய்து வேனில் ஏற்றி அருகே உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். கைதான 3 பேர் மீதும் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.