மக்களின் பிரச்சினைகளை பா.ஜனதா தட்டி கேட்கும்
‘தொண்டர்களை யாரும் தொட்டு கூட பார்க்க முடியாது, மக்களின் பிரச்சினைகளை பா.ஜனதா தட்டி கேட்கும்’ என்று கிருஷ்ணகிரியில் நடந்த கூட்டத்தில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.
'தொண்டர்களை யாரும் தொட்டு கூட பார்க்க முடியாது, மக்களின் பிரச்சினைகளை பா.ஜனதா தட்டி கேட்கும்' என்று கிருஷ்ணகிரியில் நடந்த கூட்டத்தில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.
பொதுக்கூட்டம்
கிருஷ்ணகிரி குந்தாரப்பள்ளி பா.ஜனதா கட்சி அலுவலக திறப்பு விழா மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
தமிழகத்தில் எப்போதும் இல்லாத ஒரு சரித்திரம் இப்போது நமது கண்முன்பு நடக்கிறது. ஒரே நேரத்தில் 10 இடங்களில் நமது கட்சி அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. 3 ஆண்டுகளுக்கு முன்பு ஜே.பி.நட்டா தலைவராக பொறுப்பேற்ற போது தமிழகம் வந்தார். அப்போது மாநில தலைவராக இருந்த முருகன், அவரை அழைத்து சென்று திருவள்ளூர் கட்சி அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
தொட்டு பார்க்க முடியாது
அந்த மாவட்ட அலுவலகத்துடன் சேர்த்து இன்றைய தினம் 10 மாவட்ட அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளது. திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. நம்மை பொறுத்தவரையில் கட்சி அலுவலகம் என்பது நமக்கு கோவில். இந்த கட்சி தியாகத்தால் வளர்க்கப்பட்ட கட்சி. எத்தனையோ பேர் கட்சி துண்டு அணிந்து உயிர் விட்டு இருக்கிறார்கள்.
இன்றைய தினம் கட்சி அலுவலகங்கள் திறப்பதற்கு காரணமாக இருந்த முன்னாள் தலைவர்கள் எல்.முருகன், தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோருக்கு எனது நன்றிகள். தமிழகத்தில் பா.ஜனதா தனி முத்திரை பதித்து வருகிறது. எதிர்த்து குரல் கொடுக்கிறோம். ஒரு தொண்டன் எதிர்த்து கேட்கிறான். சிறை செல்கிறான். மீண்டும் வெளியே வந்து எதிர்த்து கேட்கிறான். மக்கள் பிரச்சினைகளை தட்டி கேட்போம். அதற்காக எந்த பிரச்சினைகள் வந்தாலும் தயங்க மாட்டோம். இது தொண்டர்களுக்கான கட்சி. இதை யாரும் தொட்டு கூட பார்க்க முடியாது.
வலுப்படுத்த வேண்டும்
தி.மு.க. அரசு அமைந்து 24 மாதங்கள் ஆகிறது. அதை அகற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இன்னும் 12 மாதங்களில் நாடாளுமன்றத்திற்கு தேர்தல் வர உள்ளது. விவசாயிகளுக்கு, மகளிருக்கு, இளைஞர்களுக்கு எண்ணற்ற திட்டங்களை மோடி நிறைவேற்றி உள்ளார். 2024 தேர்தலில் மோடியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும். அதற்காக நாம் வேகமாக பணியாற்ற வேண்டும்.
அடிமட்டத்தில் இருந்து நாம் கட்சியை பலப்படுத்திட வேண்டும். நமது கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் பணியாற்ற வேண்டும். நமது கூட்டணி எம்.பி.க்களை நாடாளுமன்றத்திற்கு நாம் அனுப்ப வேண்டும். மக்களின் பிரச்சினைகளை முன்னெடுத்து உங்களுக்கான அரசாக பா.ஜனதா உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் பேசியதாவது:-
மக்கள் அளித்த சான்று
நடந்து முடிந்த வடமாநில தேர்தலில் நாம் அமோக வெற்றி பெற்றுள்ளோம். இது மோடி அரசுக்கு மக்கள் அளித்த சான்றாகும். பா.ஜனதா தியாகத்திற்கு பெயர் போன கட்சியாகும். இந்த நேரத்தில் இக்கட்சிக்காக உழைத்து மறைந்த ஆடிட்டர் ரமேசுக்கு புகழஞ்சலி செலுத்துகிறேன். பா.ஜனதா அரசின் திட்டங்களை நாம் வீடு, வீடாக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
பா.ஜனதா ஆட்சிக்கு வந்த 9 ஆண்டுகளில் நாடு வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது. மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் வளர்ச்சிக்கான பட்ஜெட். தமிழகத்திற்கு இதுவரை இல்லாத அளவிற்கு பா.ஜனதா ஆட்சியில் ரெயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது. மோடி அரசின் திட்டங்களை, பயன்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.