பொக்லைன் எந்திரத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
பொக்லைன் எந்திரத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
திருச்சி மாநகராட்சி 44-வது வார்டுக்கு உட்பட்ட மேலகல்கண்டார்கோட்டை, விவேகானந்தா நகர், நேரு நகர், ராஜீவ் காந்தி நகர், காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் சுமார் 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் ஆமைவேகத்தில் நடைபெற்று வருவதால் அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழிகள் அப்படியே போடப்பட்டுள்ளதால் வாகனங்களில் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே பாதாள சாக்கடை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதை கண்டித்து பொதுமக்கள் நேற்று பாதாள சாக்கடை பணியில் ஈடுபட்டு இருந்த பொக்லைன் எந்திரத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையறிந்த மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்தசம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.