பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் 4 இடங்களில் மக்கள் சங்கமம் மாநாடு
தூத்துக்குடி மாவட்டத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் 4 இடங்களில் மக்கள் சங்கமம் மாநாடு நடத்தப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தலைவர் அப்துல்காதர் தூத்துக்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை போற்றும் விதமாகவும், சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தை நினைவு கூறும் விதமாகவும், மக்கள் ஒற்றுமைக்காகவும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் மக்களாட்சியை பாதுகாப்போம் என்ற முழக்கத்துடன் ஜனவரி மாதம் 26-ந் தேதி முதல் ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி வரை நாடு முழுவதும் பொதுக்கூட்டம், பேரணி, கருத்தரங்கம், கண்காட்சி, கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் தமிழகத்தில் 120 இடங்களில் மக்கள் சங்கமம் மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் 4 இடங்களில் மக்கள் சங்கமம் மாநாடு நடத்தப்படுகிறது. அதன்படி செய்துங்கநல்லூரில் வருகிற 17-ந் தேதியும், அய்யனாரூத்து பகுதியில் 23-ந்தேதியும், உடன்குடியில் 31-ந்தேதியும், தூத்துக்குடி மாநகரில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 7-ந்தேதியும் மாநாடு நடத்தப்படுகிறது. இதில் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டு பேச உள்ளனர். இந்த மாநாட்டில் அந்தந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் உள்பட அனைத்து தரப்பினரும் பங்கேற்க உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது, மாநகர தலைவர் அப்துல் ஹாலிக், மக்கள் தொடர்பு ஒருங்கிணைப்பாளர் அப்துல் ரகுமான், முன்னாள் மாவட்ட செயலாளர் சம்சு மரைக்காயர், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பாதுஷா, முகமது அப்பாஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.