பெரம்பலூர் மாவட்ட இளையோர் திருவிழா
பெரம்பலூர் மாவட்ட இளையோர் திருவிழா நடைபெற்றது.
மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பெரம்பலூர் மாவட்ட நேரு யுவகேந்திரா சார்பில் மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு கலை, இலக்கிய போட்டிகளை உள்ளடக்கிய இளையோர் திருவிழா பெரம்பலூர் ஸ்ரீசாரதா மகளிர் கல்லூரியில் நேற்று காலை நடந்தது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் கற்பகம் தலைமை தாங்கி பேசினார். இதில் சிறப்பு அழைப்பாளராக பெரம்பலூர் தொகுதி எம்.பி. பாரிவேந்தா் கலந்து கொண்டு இளையோர் திருவிழாவை தொடங்கி வைத்து பேசினார். பின்னர் விழாவில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சியை நிகழ்த்திய மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகளை கலெக்டர் கற்பகம், பாரிவேந்தர் எம்.பி. ஆகியோர் வழங்கி பாராட்டினர். விழாவில் மாணவ-மாணவிகளுக்கு கவிதை போட்டி, ஓவிய போட்டி, பேச்சுப்போட்டி (ஆங்கிலம்), செல்போனில் புகைப்படம் எடுத்தல் போட்டி, கிராமிய கலை நிகழ்ச்சி குழு போட்டி ஆகியவை நடந்தது. பின்னர் மாலையில் நடந்த பரிசளிப்பு விழாவில் போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு பிரபாகரன் எம்.எல்.ஏ. பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழை வழங்கி பாராட்டினார். போட்டிகளில் முதலிடம் பிடித்த மாணவ-மாணவிகள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ளனர். மேலும் கல்லூரி வளாகத்தில் பல்வேறு அரசு துறைகளின் மூலம் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது. இதில் ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சிவசுப்பிரமணியம், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு வளவன், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் தமிழ் பாக்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட இளையோர் அலுவலர் கீர்த்தனா வரவேற்றார். முடிவில் நேரு யுவகேந்திரா உதவி திட்ட அலுவலர் தமிழரசன் நன்றி கூறினார்.