8 தங்க பதக்கங்களை வென்று பெரம்பலூர் மாற்றுத்திறனாளிகள் சாதனை


8 தங்க பதக்கங்களை வென்று பெரம்பலூர் மாற்றுத்திறனாளிகள் சாதனை
x

மாநில அளவிலான நீச்சல் போட்டியில் 8 தங்க பதக்கங்களை வென்று பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் சாதனை புரிந்தனர். தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்ள அரசு உதவ வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெரம்பலூர்

மாநில அளவிலான போட்டி

பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 20 மாற்றுத்திறனாளிகள் மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன், சென்னை வேளச்சேரியில் சமீபத்தில் நடந்த மாநில அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான நீச்சல் மற்றும் பளுதூக்குதல் போட்டியில் கலந்து கொண்டனர்.

இதில் நீச்சல் போட்டிகளில் பெரம்பலூர் மாவட்டம், மேலப்புலியூரை சேர்ந்தவரும், ரேஷன் கடை எடையாளருமான மாற்றுத்திறனாளி கலைச்செல்வன் (வயது 38) என்பவர் வெற்றி பெற்று 2 தங்க பதக்கங்களும், ஒரு வெள்ளி பதக்கமும் பெற்றார்.

8 தங்க பதக்கங்களை வென்று சாதனை

இதேபோல் நீச்சல் போட்டிகளில் வேப்பந்தட்டை தாலுகா, மங்களமேட்டை சேர்ந்த மாற்றுத்திறனாளியும், தையல் தொழிலாளியுமான அம்பிகாபதி (35) வெற்றி பெற்று 3 தங்க பதக்கங்களை பெற்றார். ஆலத்தூர் தாலுகா ஆதனூர் கிராமத்தை சேர்ந்த தங்கவேல் மகன் மாற்றுத்திறனாளி ஜீவா (13) நீச்சல் போட்டிகளில் வெற்றி பெற்று 3 தங்க பதக்கங்களை பெற்றார். ஜீவா ஆதனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருடைய தந்தை ஓட்டல் தொழிலாளி ஆவார்.

மாநில அளவிலான நீச்சல் போட்டியில் 8 தங்க பதக்கங்களை வென்று பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் கலைச்செல்வன், அம்பிகாபதி, ஜீவா ஆகியோர் சாதனை புரிந்தனர். இதையடுத்து அவர்கள் 3 பேரும் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவை நேற்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

தேசிய அளவிலான போட்டி

இவர்கள் 3 பேரும் அசாம் மாநிலம், கவுகாத்தியில் வருகிற 11 முதல் 13-ந்தேதி வரை நடைபெறவுள்ள தேசிய அளவிலான நீச்சல் போட்டிகளில் பங்கேற்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் போட்டிகளில் கலந்து கொள்ள போதிய நிதியுதவி இல்லாமல் தவித்து வருவதாக கூறப்படுகிறது. எனவே அவர்களுக்கு தேவையான நிதி உதவிகளை அரசு செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

100 நாட்களுக்கு முன்பே முன்பதிவு

கலைச்செல்வன்:- தேசிய அளவிலான நீச்சல் போட்டிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது என்பதை நினைக்கும் போது ஒரு பக்கம் பெருமையாக உள்ளது. ஆனால் அசாம் மாநிலத்திற்கு செல்வதற்கு ரெயிலில் சென்றால் சுமார் 100 நாட்கள் முன்பே முன்பதிவு செய்திருக்க வேண்டும். தற்போது ரெயிலில் செல்வதற்கு வாய்ப்பு இல்லாததால் விமானம் மூலம் செல்ல நேரிடும். ரெயிலில் சென்றால் குறைந்த அளவு தான் செலவு ஏற்படும்.

தற்போது விமானம் மூலம் அசாம் மாநிலம் சென்றால் கூடுதல் செலவு ஏற்படும். இதற்கு தற்போது போதிய நிதி இல்லை. ஏற்கனவே மாநில அளவிலான போட்டிகளில் மாவட்ட நிா்வாகம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் உள்ளிட்டோர் உதவியுடன் சென்று வந்தோம். இதேபோல் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க செல்ல நிதி உதவி தந்து யாரும் முன்வந்தால் நன்றாக இருக்கும் என்றார்.

தங்கம் வெல்வோம்

அம்பிகாபதி:- எனது தந்தை இறந்து விட்டார். தாய் மற்றும் 2 அண்ணன்கள், 2 அக்காள்கள் உள்ளனர். நான் தையல் வேலை செய்து வருகிறேன். தேசிய அளவிலான நீச்சல் போட்டிகளில் பங்கேற்க செல்ல போதிய நிதி இல்லாமல் இருக்கிறோம். சங்கத்தின் சார்பில் நிதி திரட்டப்பட்டு வருகிறது. போதிய நிதி கிடைத்தால் மாநில அளவில் தங்கம் வென்றது போல் தேசிய அளவிலான நீச்சல் போட்டிகளிலும் தங்கம் வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை தேடி தருவேன்.

பண வசதி கிடையாது

ஜீவாவின் தந்தை தங்கவேல்:- எனது மகன் முதல் முறையாக மாநில அளவிலான நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்டு 3 தங்க பதக்கங்களை வென்றுள்ளான் என்பதை நினைத்து பெருமை படுகின்றேன். இதனால் தற்போது அவனை சக மாணவர்கள், ஆசிரியர்கள் மட்டுமின்றி ஊர் மக்களும் பாராட்டி வருகிறார்கள். தற்போது அவனுக்கு தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது. அங்கு சென்று வர அவனுக்கு செலவு செய்ய என்னிடம் அவ்வளவு பணம் கிடையாது. அதற்கு அரசு உதவ முன்வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story