பணித்திறன் விளையாட்டு போட்டி: சாதனை படைத்த ஊர்க்காவல் படைவீரர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு
பணித்திறன் விளையாட்டு போட்டியில் சாதனை படைத்த ஊர்க்காவல் படைவீரர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு தொிவித்தாா்.
தமிழ்நாடு ஊர்க்காவல் படை 28-வது பணித்திறன் மற்றும் விளையாட்டு போட்டி கடந்த வாரம் திருவண்ணாமலை ஆயுதப்படை மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் விழுப்புரம் சரக ஊர்க்காவல் படை சார்பில் வீரர்கள் கலந்து கொண்டு கைப்பந்து போட்டியில் முதலிடம், நீளம் தாண்டுதல் போட்டியில் ஊர்க்காவல் படை வீரர் தினகரன் முதலிடம், கூட்டு கவாத்து போட்டியில் முதலிடம், முதலுதவி போட்டியில் முதலிடம், அலங்கார அணி வகுப்பில் முதலிடம், கயிறு இழுத்தல் போட்டியில் (மகளிர்) 2-வது இடத்தையும் பெற்று கோப்பையை வென்று சாதனை படைத்தனர்.சாதனை படைத்த ஊர்க்காவல் படையினரை கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தனது அலுவலகத்துக்கு வரவழைத்து, அவர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சியில் விழுப்புரம் சரக உதவி தளபதி கேதார்நாதன், ஊர்க்காவல் படை வட்டார தளபதி அம்ஜத்கான், துணை வட்டார தளபதி கலாவதி, கோட்ட தளபதி சிவப்பிரகாசம், உதவி படை தளபதிகள் கணபதி, வேதரத்தினம், மதியழகன், சுதர்சனம், வள்ளியம்மை, எழுத்தர் ராமானுஜம் ஆகியோர் உடனிருந்தனர்.