பெரியகுளம் நகராட்சி கூட்டம்
பெரியகுளம் நகராட்சி கூட்டம் நேற்று நடைபெற்றது.
பெரியகுளம் நகராட்சி கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் சுமிதா சிவக்குமார் தலைமை தாங்கினார். ஆணையர் கணேசன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் குறித்து பேசினர். அப்போது கவுன்சிலர்கள் வெங்கடேசன், பவானி முருகன், நாக பாண்டி மகேந்திரன், குருசாமி ஆகியோர் பேசும்போது, வடகரை மில்லர் சாலையில் சாக்கடை மற்றும் குப்பை கழிவுகளால் துர்நாற்றம் வீசுகிறது. இதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வடகரை அம்மையநாயக்கனூர் சாலையில் தெருவிளக்கு இல்லாததால் மக்கள் மிகவும் சிரமம் அடைகின்றனர். நகரில் சிலர் சாலையை ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் கட்டி வருகின்றனர். இதனால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் தெருவிளக்கு பராமரிப்பு, பாதாள சாக்கடை இணைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் குறித்து கவுன்சிலர்கள் பேசினர். இதையடுத்து பேசிய தலைவர், தங்களது கோரிக்கைள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.