மருத்துவ படிப்பிற்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் பெரியகுளம் மாணவர் சாதனை


மருத்துவ படிப்பிற்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் பெரியகுளம் மாணவர் சாதனை
x
தினத்தந்தி 18 July 2023 2:30 AM IST (Updated: 19 July 2023 5:55 PM IST)
t-max-icont-min-icon

மருத்துவ படிப்பிற்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் பெரியகுளம் மாணவர் 9-ம் இடத்தை பிடித்து சாதனை படைத்தார்.

தேனி

தமிழகத்தில் உள்ள அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகளில் நீட் தேர்வில் எடுத்த மதிப்பெண்களை அடிப்படையாக கொண்டு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கை நடத்தப்படுகிறது. 2023-24-ம் கல்வியாண்டிற்கான மருத்துவ படிப்பு கலந்தாய்வு வருகிற 25-ந்தேதி தொடங்க உள்ளது. இதையொட்டி மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தன.

இந்தநிலையில் நேற்று முன்தினம் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. அதேபோல் மருத்துவ படிப்பில் சேர அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டிற்கும் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், தேனி மாவட்டம் பெரியகுளம் வி.நி. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த கணேஷ் என்ற மாணவர் 9-வது இடத்தை பிடித்து சாதனை படைத்தார். அவர் நீட் தேர்வில் 720-க்கு 530 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். அந்த வகையில் தற்போது அவர் மருத்துவ படிப்பில் சேர உள்ளார். இதையடுத்து மாணவர் கணேசுக்கு பெற்றோர், ஆசிரியர்கள், உறவினர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

மாணவர் கணேசின் தந்தை முனியாண்டி. கூலித்தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். அவரது தாய் பராசக்தி. இவர்கள் பெரியகுளம், தென்கரை வாகம்புளி தெருவில் வசித்து வருகின்றனர். இதுகுறித்து மாணவர் கணேஷ் கூறுகையில், "டாக்டர் ஆவதே எனது கனவாக இருந்தது. இதற்காக விடாமுயற்சியுடன் படித்தேன். தற்போது அந்த கனவு நிறைவேற உள்ளது. அதுவும் மாநில அளவில் தரவரிசை பட்டியலில் இடம் பெறுவேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. கலந்தாய்வில் சென்னை, மதுரை, கோவை ஆகிய நகரங்களில் உள்ள ஏதாவது ஒரு அரசு மருத்துவ கல்லூரியில் சேர முயற்சி செய்வேன். டாக்டர் ஆன பிறகு ஏழைகளுக்கு மருத்துவ உதவி செய்வேன்" என்றார்.


Next Story