ஈரோடு பெரியமாரியம்மன் கோவில் உண்டியலில்ரூ.21¼ லட்சம், 108 கிராம் தங்கம் பக்தர்கள் காணிக்கை
ஈரோடு பெரியமாரியம்மன் கோவில் உண்டியலில் ரூ.21¼ லட்சம், 108 கிராம் தங்கம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.
ஈரோட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற பெரியமாரியம்மன் கோவில் மற்றும் அதன் வகையறா கோவில்களான சின்னமாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களின் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா கடந்த மாதம் 21-ந்தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கி, கடந்த 9-ந்தேதி மறுபூஜையுடன் நிறைவடைந்தது. பெரியமாரியம்மன் கோவிலில் 6 நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. திருவிழாவுக்காக 5 உண்டியல்கள் கூடுதலாக வைக்கப்பட்டன. திருவிழா முடிந்த நிலையில் நேற்று ஈரோடு பெரியமாரியம்மன் கோவிலில் வைக்கப்பட்டுள்ள நிரந்தர மற்றும் தற்காலிக உண்டியல்கள் 11-ம் திருச்செங்கோடு அறநிலையத்துறை உதவி ஆணையாளர் ரமணிகாந்தன், ஈரோடு தக்கார் அன்னக்கொடி, கோவில் செயல் அலுவலர் அருள்குமார் முன்னிலையில் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டன.
இதில், உண்டியல்களில் பக்தர்கள் ரூ.21 லட்சத்து 35 ஆயிரத்து 286-ம், 108 கிராம் தங்கம், 609 கிராம் வெள்ளியும் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். காணிக்கை எண்ணும் பணியில் கல்லூரி மாணவ-மாணவிகளும், பக்தர்களும் ஈடுபட்டனர்.