இடம் தேர்வு செய்யப்பட்டதும் சென்னையில் நிரந்தர புத்தக பூங்கா: முதல்-அமைச்சர் பேச்சு
இடம் தேர்வு செய்யப்பட்டதும் சென்னையில் நிரந்தர புத்தக பூங்கா அமைக்க முறையான அறிவிப்பை வெளியிடுவேன் என்று புத்தக கண்காட்சி தொடக்கவிழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
சென்னை,
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) சார்பில் 46-வது சென்னை புத்தக கண்காட்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 1,000 அரங்குகளுடன் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் தொடக்கவிழா நேற்று மாலை நடந்தது.
இந்த விழாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். இதில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மனோ தங்கராஜ், தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி, தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம், பபாசி தலைவர் வயிரவன், செயலாளர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். புத்தக காட்சியை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதனை பார்வையிட்டார்.
பொற்கிழி விருதுகள்
அதன்பின்னர் புத்தக கண்காட்சி வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த மேடையில் நடந்த நிகழ்ச்சியில், முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி விருது தேவி பாரதி (நாவல்), சந்திரா தங்கராஜ் (சிறுகதை), தேவதேவன் (கவிதை), சி.மோகன் (மொழிபெயர்ப்பு), பிரளயன் (நாடகம்), பா.ரா.சுப்பிரமணியன் (உரைநடை, ஆய்வு) ஆகிய 6 பேருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்.
ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் இந்த பொற்கிழி விருதுகளின் அடிப்படையில், 100-வது விருதை பா.ரா.சுப்பிரமணியன் பெற்றார். அதனைத் தொடர்ந்து 9 பேருக்கு பபாசி சார்பில் அறிவிக்கப்பட்ட விருதுகளையும் வழங்கினார். அதையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விழாவில் பேசியதாவது:-
அறிவு மலர்ச்சி
ஒருகாலத்தில் சென்னையில் மட்டுமே புத்தக கண்காட்சி நடந்து வந்தது. அதைத்தொடர்ந்து ஒரு சில மாவட்டங்களில் நடக்கக்கூடிய வாய்ப்பைப் பெற்றிருக்கிறது. புத்தக வாசிப்பில் ஆர்வம் இருக்கக்கூடிய ஆட்சித்தலைவர்கள், அந்த ஆட்சியர்கள் அவரவர் மாவட்டத்திலேயே அதற்கான முயற்சிகளை எடுத்தார்கள். அந்த புத்தக கண்காட்சியை தொடர்ந்து நடத்தி கொண்டிருக்கிறார்கள்.
கடந்த ஆண்டு அனைத்து மாவட்டங்களிலும் இந்த புத்தக கண்காட்சிகள் நடத்துவதற்கு நம்முடைய அரசு ஆணையிட்டது. அதற்காக ரூ.5 கோடியே 50 லட்சம் நிதியை ஒதுக்கீடும் செய்திருக்கிறோம். அதன் விளைவாக, தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் புத்தக கண்காட்சிகள் நடக்க தொடங்கி இருக்கின்றன. 10 நாட்கள், 2 வாரங்கள் என நடக்கும் இந்த புத்தக சந்தைகள் மூலமாக புத்தக விற்பனை மட்டுமல்ல, சிறப்பான சொற்பொழிவாளர்களைக் கொண்ட இலக்கிய நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. இதன் மூலமாக மாவட்டந்தோறும் இலக்கிய எழுச்சி, அறிவு மலர்ச்சி ஏற்பட்டு வருகிறது.
'வீட்டுக்கு ஒரு நூல் நிலையம் அமைய வேண்டும்' என்று ஆசைப்பட்டவர் அண்ணா. அத்தகைய நோக்கத்தை உருவாக்கவே, மாவட்டந்தோறும் புத்தக கண்காட்சிகளையும், இலக்கிய விழாக்களையும் நடத்துவதற்கு அனைத்து விதமான உதவிகளையும் நம்முடைய அரசு செய்து கொண்டிருக்கிறது.
புத்தக பூங்கா
நிரந்தரமாக புத்தக பூங்கா அமைக்க சென்னையில் இடம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சராக இருந்த கலைஞர் அறிவிப்பு செய்தார்கள். அதனை நினைவூட்டி நானும் கடந்த ஆண்டு அந்த வாக்குறுதியை நினைவுபடுத்தியிருக்கிறேன். இடம் தேர்வு செய்யப்பட்டதும், அதுதொடர்பான முறையான அறிவிப்பை வெளியிடுவேன் என்பதை மகிழ்ச்சியோடு இந்த நிகழ்ச்சியில் நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
கடந்த ஓராண்டு காலத்தில் தமிழுக்கும், எழுத்துக்கும், எழுத்தாளர்களுக்கும் அளவில்லாத ஆக்கப்பணிகளை தமிழ்நாடு அரசு செய்து வருகிறது என்பதை யாராலும் மறந்துவிடவும், மறுக்கவும் முடியாது. எழுத்தும், இலக்கியமும் மொழியை வளர்க்கின்றன. வளர்ப்பது மட்டுமல்ல, காக்கின்றன. இதுபோன்ற புத்தக சந்தைகளும் இலக்கிய விழாக்களும் எழுத்தையும், இலக்கியத்தையும் இன்றைய இளைய தலைமுறைக்கு தமிழ் உணர்வை ஊட்டுவதற்காக பயன்பட வேண்டும்.
மொழி
மொழி சிதைந்தால் இனம் சிதையும். இனம் சிதைந்தால் நம்முடைய பண்பாடு சிதைந்துவிடும். பண்பாடு சிதைந்தால் நம்முடைய அடையாளமே போய்விடும். அடையாளம் போய்விட்டால், தமிழர்கள் என்று சொல்லிக்கொள்ளும் தகுதியை நாம் இழந்து விடுவோம். தமிழர் என்ற தகுதியை இழந்தால் வாழ்ந்தும் பயனில்லை. எனவே மொழியைக் காப்பதற்கான கடமை என்பது எங்களை போன்ற அரசியல் இயக்கங்களை போலவே, எழுத்தாளர்களுக்கும் இருந்தாக வேண்டும். தங்களது எழுத்தை மொழிகாப்பதற்கான மக்கள் எழுத்தாக பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.