அகரப்பொதக்குடியில் நிரந்தரஅங்காடி கட்டிடம் கட்டித்தர வேண்டும்


அகரப்பொதக்குடியில் நிரந்தரஅங்காடி கட்டிடம் கட்டித்தர வேண்டும்
x

அகரப்பொதக்குடியில் நிரந்தர அங்காடி கட்டிடம் கட்டித்தர வேண்டும்

திருவாரூர்

வாடகை கட்டிடத்தில் போதிய வசதி இல்லாததால் அகரப்பொதக்குடியில் நிரந்தர அங்காடி கட்டிடம் கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போதுமான வசதி இல்லை

கூத்தாநல்லூர் அருகே அகரப்பொதக்குடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு உள்ள கிராம மக்கள் அரிசி, சீனி, கோதுமை, பருப்பு, ஆயில், மண்எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய ரேஷன் பொருட்கள் வாங்குவதற்காக அகரப்பொதக்குடியில் உள்ள முகமதியா தெருவில் தனியார் வாடகை கட்டிடத்தில் வைத்து பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த கட்டிடத்தில் போதுமான வசதி இல்லை. 40 ஆண்டுகளுக்கும் மேலாக வாடகை கட்டிடத்திலேயே அங்காடி செயல்படுத்தப்படுகிறது. இதனால் ரேஷன் பொருட்கள் வாங்க மக்கள் பல ஆண்டுகளாக சிரமப்பட்டு வருகின்றனர். எனவே அரசு சார்பில் நிரந்தர அங்காடி கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நிரந்தர கட்டிடம்

இது குறித்து அகரப்பொதக்குடியை சேர்ந்த மும்தாஜ் பேகம் கூறுகையில், அகரப்பொதக்குடியில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக அங்காடி கட்டிடம் வாடகை கட்டிடத்திலேயே செயல்படுகிறது. அங்கு வைத்து தான் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. மேலும் அடிக்கடி வாடகை கட்டிடமும் மாற்றப்பட்டு வேறு வேறு இடங்களில் வைத்து பொருட்கள் வழங்கப்படுகிறது. இதனால் மக்கள் அடிக்கடி சிரமம் அடைந்து வருகின்றனர். தற்போது அகரப்பொதக்குடியில் முகமதியா தெருவில் உள்ள ஒரு வாடகை கட்டிடத்தில் வைத்து ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. ஆனால் அங்கு போதுமான வசதிகள் இல்லை. மேலும் சாலையோரத்தில் அங்காடி உள்ளதால், மக்கள் சவுகரியமாக நின்று பொருட்கள் வாங்க முடியாத நிலை உள்ளது இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. எனவே அகரப்பொதக்குடியில் அரசு சார்பில் நிரந்தர அங்காடி கட்டிடம் கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், முழு நேர பணியாளரை நியமனம் செய்து முழு நேர அங்காடியாக செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


Next Story