உள்ளூர் வாகனங்களுக்கு கட்டண விலக்கில் நிரந்தர தீர்வு வேண்டும்: கப்பலூர் சுங்கச்சாவடியை 8-ந்தேதி முற்றுகையிட்டு போராட்டம்- ஒருங்கிணைப்பு குழு அறிவிப்பு


உள்ளூர் வாகனங்களுக்கு கட்டண விலக்கில் நிரந்தர தீர்வு வேண்டும்: கப்பலூர் சுங்கச்சாவடியை 8-ந்தேதி முற்றுகையிட்டு போராட்டம்- ஒருங்கிணைப்பு குழு அறிவிப்பு
x

உள்ளூர் வாகனங்களுக்கு கட்டண விலக்கில் நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி கப்பலூர் சுங்கச்சாவடியை 8-ந்தேதி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது.

மதுரை

திருமங்கலம்,

உள்ளூர் வாகனங்களுக்கு கட்டண விலக்கில் நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி கப்பலூர் சுங்கச்சாவடியை 8-ந்தேதி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது.

உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கும் நடைமுறை உள்ளது. இந்தநிலையில் கடந்த 1-ம் தேதி முதல் சுங்கச்சாவடி நிர்வாகம் திருமங்கலம் வாகன உரிமையாளர்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என கூறி மாதாந்திர கட்டணமாக ரூ.310 என நிர்ணயம் செய்து நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து திருமங்கலம் பகுதி வாகன உரிமையாளர்கள், வாகன ஓட்டிகள் இணைந்து சுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழுவை ஏற்படுத்தி கடந்த 22-ந் தேதி கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி திருமங்கலம் நகர் பகுதி முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்தினர். இதையடுத்து அமைச்சர் மூர்த்தி, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்கு பின்பு அமைச்சர் மூர்த்தி, திருமங்கலம் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்ககூடாது என தெரிவித்தார்.

ஆனால் சுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழுவினர், பேச்சுவார்த்தையில் தங்களுக்கு முழு திருப்தி இல்லை எனவும், உள்ளூர் கட்டணங்களுக்கு விலக்கு என அமைச்சர் அறிவித்துள்ளது தற்காலிக தீர்வு மட்டுமே, நிரந்தர தீர்வு இல்லை என்றனர்.

தீர்மானம்

இந்தநிலையில் திருமங்கலத்தில் சுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது. மதுரை, விருதுநகர், தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து வாகன உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். இதில் கப்பலூர் சுங்கச்சாவடியை நிரந்தரமாக அகற்றக்கோரி வருகிற 8-ந் தேதி முற்றுகை போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது கப்பலூர் தொழிற்பேட்டை தொழிலாளர்களையும், வாகனங்களையும் ஒன்று திரட்டி போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தனர்.

இதற்கிடையே கப்பலூர் சுங்கச்சாவடியில் திருமங்கலத்தைச் சேர்ந்த வாகனம் ஒன்றை தடுத்து நிறுத்தி அடையாள அட்டை கேட்டுள்ளனர். வாகன உரிமையாளர் உரிய அடையாள அட்டையை காண்பித்தும் வாகனத்தை விட மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சுங்கச்சாவடி பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை நடத்தி, அந்த வாகனத்தை சுங்க கட்டணம் செலுத்தாமல் செல்ல அனுமதித்தனர்.


Next Story