மயான சாலை அமைக்க அனுமதி வழங்க வேண்டும்
கொள்ளிடம் அருகே மயான சாலை அமைக்க அனுமதி வழங்கவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொள்ளிடம்:
கொள்ளிடம் அருகே மயான சாலை அமைக்க அனுமதி வழங்கவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மயான சாலை
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள குத்தவக்கரை, மேலவல்லம், கொள்ளிடம் உள்ளிட்ட பகுதிகளுக்கு குத்தவக்கரை கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றின் வலது கரை சாலையிலிருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தில் மயானம் அமைந்துள்ளது.
ஆற்றங்கரை சாலையிலிருந்து இந்த மயானத்துக்கு செல்வதற்கு சாலை வசதி இல்லை..இதனால் இறந்தவர்களின் உடல்களை ஆற்றங்கரை சாலையிலிருந்து பள்ளமான பகுதியில் உள்ள மயானத்துக்கு மிகுந்த சிரமத்துடன் தோளில் சுமந்து செல்கின்றனர்.
அனுமதி மறுப்பு
ஆற்றங்கரை சாலையிலிருந்து உடலை சுமந்து செல்லும்போது தடுமாறி கீழேவிழும் நிலை ஏற்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் சாலை அமைப்பதற்கு தொடர்ந்து கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், கிராம மக்களின் கோரிக்கைகளை ஏற்று கடந்த வருடம் சாலை அமைக்கும் முயற்சி நடைபெற்றது.
ஆனால் மயானத்துக்கு செல்லும் இடம் வனத்துறைக்கு சொந்தமானதாக இருப்பதால் சாலை அமைக்க அனுமதி தர முடியாது என்று மறுத்து விட்டனர்.இதனால் மயானத்துக்கு சாலை அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பொதுமக்கள் கோரிக்கை
இறந்தவர்களின் உடல்களை மயானத்தில் அடக்கம் செய்வதற்கு எளிதில் எடுத்து செல்வதற்கு மட்டுமே சாலை தேவைப்படுகிறது. இதனால் சாலை அமைக்கும் பணியும் நிறுத்தப்பட்டுள்ளது.
எனவே மேலவல்லம், கொள்ளிடம், குத்தவக்கரை உள்ளிட்ட பகுதி மக்களின் நலன் கருதி இறந்தவர்களின் உடலை எளிதில் சென்று அடக்கம் செய்யும் வகையில் ஆற்றங்கரை சாலையிலிருந்து மயானத்திற்கு செல்ல 200 மீட்டர் தூரத்துக்கு சாலை அமைக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றனர்.