ரூ.4½ கோடியில் புதிய பள்ளி கட்டிடங்கள் கட்ட அனுமதி
ரூ.4½ கோடியில் புதிய பள்ளி கட்டிடங்கள் கட்ட அனுமதி கிடைத்துள்ளதாக அணைக்கட்டு ஒன்றியக்கு தலைவர் தெரிவித்தார்.
அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம், ஒன்றியக் குழு தலைவர் சி.பாஸ்கரன் தலைமையில் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி, அலுவலக மேலாளர் சதீஷ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இளநிலை உதவியாளர் வரவேற்று பேசினார். கூட்டத்தில் 20 கவுன்சிலர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கட்டுப்பட்டி மலைப்பகுதிகளில் உண்டு உறைவிடப் பள்ளி கட்டுவதற்கான அனுமதி வழங்க வேண்டும். உண்டு உறைவிட பள்ளி கட்டினால் மலைப்பகுதியில் உள்ள 75 மாணவர்கள் அங்கு தங்கி படிப்பதற்கான வாய்ப்பு உள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரி கோரிக்க வைத்தார்.
கீழ்கொத்தூரில் இருந்து ஒடுகத்தூர் மற்றும் அணைக்கட்டுக்கு வரும் அரசு பஸ்களில் மாணவர்கள் தொங்கியப்படியே வருகிறார்கள். அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. எனவே கூடுதலாக பஸ் இயக்க வழங்க வேண்டும் என கவுன்சிலர் பிரகாஷ் கோரிக்கை விடுத்தார். அதற்கு போக்குவரத்து துறை சார்பில் பதில் அளித்த அதிகாரி தற்போது ஆள் பற்றாக்குறையால் அதிக பஸ்கள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இது குறித்து மேல் அதிகாரிக்கு தெரிவித்து பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
இதனையடுத்து ஒன்றியக் குழு தலைவர் சி.பாஸ்கரன் பேசுகையில் தற்போது அரசு ஒதுக்கிய நிதிகளில் ஊராட்சியில் செய்யும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். ரூ.4 கோடியே 56 லட்சத்தில் 16 பள்ளிகளில் 82 வகுப்பறைகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த பணியை நாளை முதல் ஒப்பந்ததாரர்கள் தொடங்கலாம் என தெரிவித்தார்.