ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதியவர் கைது


ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதியவர் கைது
x

‘புளூடூத்’ பயன்படுத்தி சுங்கத்தேர்வு எழுதி முறைகேட்டில் ஈடுபட்ட விவகாரத்தில் 28 பேர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். அதில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியவர் மட்டும் கைது செய்யப்பட்டார்.

பெரம்பூர்,

மத்திய அரசின் சுங்கத்துறையில் காலியாக உள்ள டிரைவர், கிளர்க், கேண்டீன் உதவியாளர் உள்பட 17 காலி பணியிடங்களான எழுத்து தேர்வு, சென்னை ராஜாஜி சாலையில் உள்ள சுங்கத்துறை தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 1,600 பேர் தேர்வு எழுதினர்.

தேர்வு தொடங்கிய 15 நிமிடங்களில் தேர்வு மையத்தில் உள்ள தேர்வர்கள் சிலர் முணுமுணுப்பதை சுங்கத்துறை தேர்வு குழு அதிகாரிகள் கண்காணித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள், தேர்வு எழுதியவர்களை சோதனை செய்தனர்.

அதில் அவர்கள், காதின் உள்புறமாக 'புளூடூத்', உடலில் எலக்ட்ரானிக் 'டிவைஸ்' போன்ற சாதனங்களை பொருத்தி இருந்ததும், அவர்களுக்கு தேர்வு மையத்தின் வெளியே இருந்து யாரோ ஒருவர், தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களை சொல்ல அவர்கள் தேர்வு எழுதி முறைகேட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

29 பேர் உறுதி

தேர்வு மையத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக அரியானா மாநிலத்தைச் சேர்ந்த 28 பேர், உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 2 பேர் என மொத்தம் 30 பேர் பிடிபட்டனர். 30 பேரையும் வடக்கு கடற்கரை போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் அவர்களில் 29 பேர் மட்டும் 'புளூடூத்' பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டது உறுதியானது. இதனால் இதில் தொடர்பு இல்லாத ஒருவரை அனுப்பி வைத்தனர்.

ஆள்மாறாட்டம்

மேலும் பிடிபட்ட 29 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சர்வின் (வயது 22) என்பவருக்கு பதிலாக சவன் (22) என்பவர் ஆள்மாறாட்டம் செய்து ஹால் டிக்கெட்டில், சர்வின் புகைப்படத்துக்கு பதிலாக இவரது புகைப்படத்தை மாற்றி ஒட்டி தேர்வு எழுதியதும் தெரிய வந்தது.

இதையடுத்து ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதியதாக சவன் கைது செய்யப்பட்டார். மற்ற 28 பேரையும் போலீசார் ஜாமீனில் விடுதலை செய்தனர்.

மேலும் இவர்களுக்கு மொத்தமாக 'புளூடூத்' வாங்கி கொடுத்து, வெளியில் இருந்தபடி தேர்வு மையத்தில் உள்ளவர்களுக்கு கேள்விக்கான பதிலை கூறியது யார்? என போலீசார் விசாரித்து வருகின்றனர். இதற்காக தேர்வர்கள் ஒவ்வொருவரிடமும் தலா ரூ.10 ஆயிரம் வசூலித்ததாகவும் கூறப்படுகிறது.


Next Story