பெருமாள் வீதி உலா
நிலக்கோட்டை அருகே, ஆடி அமாவாசையையொட்டி பெருமாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
நிலக்கோட்டை அருகே மாலப்பட்டியில் உள்ள பெருமாள் கோவிலில் ஆடி அமாவாசையையொட்டி நேற்று திருவிழா நடந்தது. இதனையடுத்து குதிரை வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதன்பிறகு பிள்ளையார்நத்தம், பெருமாள்கோவில்பட்டி, செக்காபட்டி, சிறுநாயக்கன்பட்டி, சொக்குபிள்ளைபட்டி, அணைப்பட்டி உள்ளிட்ட அனைத்து கிராமங்களிலும் பெருமாள் வீதி உலா வந்தார். பின்னர் வைகை ஆற்றில் பெருமாள் இறங்கினார்.
அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள், பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து மண்டகபடிதாரர்கள் சார்பில், சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடந்தது. அதன்பிறகு அணைப்பட்டி வீரஆஞ்சநேயர் கோவில் முன்பு பக்தர்களுக்கு பெருமாள் அருள்பாலித்தார்.
பின்னர் அங்கிருந்து எஸ்.மேட்டுப்பட்டி கிராமத்துக்கு சென்ற பெருமாள், மண்டகபடிதாரர்களின் பூஜையை ஏற்று, மீண்டும் அணைப்பட்டிக்கு வந்தடைந்தார். இந்த விழாவில் திண்டுக்கல், நிலக்கோட்டை, வத்தலக்குண்டு, கொடைரோடு, பள்ளப்பட்டி, விளாம்பட்டி பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.