பெருமாள் கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றம்


பெருமாள் கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றம்
x

திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோவில் தேர்த்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது

திருச்சி

திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோவில் தேர்த்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது

திருவெள்ளறை பெருமாள் கோவில்

மண்ணச்சநல்லூர் அருகே திருவெள்ளறை கிராமத்தில் புண்டரீகாட்ச பெருமாள் கோவில் உள்ளது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான இங்கு ஒவ்வொரு ஆண்டும் தேரோட்டம் நடத்தப்படுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டுக்கான விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக காலை 4.45 மணிக்கு பெருமாள், தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அனந்தராயர் மண்டபத்தை வந்தடைந்தனர். அதைத்தொடர்ந்து கருடன் படம் வரையப்பட்ட கொடி வீதிஉலாவாக எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து பெருமாள் தாயார் கொடிமரம் முன்பு எழுந்தருளினர்.

பின்னர், கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, பட்டயதாரர்கள், பொதுமக்கள் முன்னிலையில் 5.25 மணிக்கு கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. இரவு வீதி வலம் வந்து திருமஞ்சனம் அலங்காரம் கண்டருளி கண்ணாடி அறை சென்றடைந்தார்.

அனுமந்த வாகனம்

இன்று (சனிக்கிழமை) இரவு அனுமந்த வாகனத்தில் சுவாமி புறப்பாடாகி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 2 மணிக்கு பெருமாள் தாயார் அனந்தராயர் மண்டபத்திலிருந்து பல்லக்கில் புறப்பாடாகி வழிநடை உபயங்கள் கண்டருளி ஸ்ரீரங்கம் வட காவிரி ஆஸ்தான மண்டபத்திற்கு சென்றடைகிறார்.

தொடர்ந்து 13-ந்தேதி அதிகாலை 1.30 மணிக்கு வழிநடை உபயங்கள் கண்டருளி கண்ணாடி அறை சென்றடைகிறார். அன்று இரவு கருடவாகனத்திலும், அடுத்தடுத்த நாட்களில் காலையில் ஹம்சவாகனம், இரவில் சேஷவாகனம், சிம்மவாகனம், யானைவாகனம் ஆகிய வாகனங்களில் சுவாமி எழுந்தருளுகிறார். 16-ந்தேதி நெல்அளவு கண்டருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 17-ந் தேதி குதிரைவாகனத்தில் சுவாமி எழுந்தருளி வையாளி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

தேரோட்டம்

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 18-ந்தேதி (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு மேல் 7.50 மணிக்குள் தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.


Next Story