பெருஞ்சாணி அணை 2 நாட்களில் 9 அடி உயர்வு


பெருஞ்சாணி அணை 2 நாட்களில் 9 அடி உயர்வு
x

குமரியில் தொடர் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பெருஞ்சாணி அணை 2 நாட்களில் 9 அடி உயர்ந்துள்ளது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குமரியில் தொடர் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பெருஞ்சாணி அணை 2 நாட்களில் 9 அடி உயர்ந்துள்ளது.

கனமழை

குமரி மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த 3 நாட்களாக மாவட்டம் முழுவதும் விடிய, விடிய கனமழை பெய்தது. நேற்று நாகர்கோவில் உள்பட மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக களியல் பகுதியில் 74.2 மில்லி மீட்டர் மழை பதிவானது. இதேபோல மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

பூதப்பாண்டி-22.2, சிற்றார் 1- 34.6, சிற்றார் 2- 30.4, கன்னிமார்-26.8, கொட்டாரம்-30.6, குழித்துறை-24, மயிலாடி- 19.4, நாகர்கோவில்- 16.2, பேச்சிப்பாறை- 57.6, பெருஞ்சாணி- 53.4, புத்தன்அணை- 53, சுருளோடு- 38.2, தக்கலை- 11.2, குளச்சல்- 6.4, இரணியல்-3, பாலமோர்- 65.6, மாம்பழத்துறையாறு- 22.5, திற்பரப்பு- 40.4, ஆரல்வாய்மொழி- 7.4, கோழிப்போர்விளை- 12.5, அடையாமடை- 35.1, குருந்தன்கோடு- 8, ஆனைகிடங்கு- 20.2, முள்ளங்கினாவிளை- 15.4, முக்கடல் அணை- 6.4 என பதிவாகி இருந்தது.

நீர்மட்டம் கிடுகிடு உயர்வு

தொடர் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 24.93 அடியாக இருந்தது. அது நேற்று 3 அடி உயர்ந்து 27.98 அடியானது. அணைக்கு வினாடிக்கு 3,117 கனஅடி நீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 330 கனஅடி நீர் திறக்கப்பட்டு உள்ளது.

77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 30-ந்தேதி 43.50 அடியாக இருந்தது. கடந்த 2 நாட்களில் 9 அடி உயர்ந்து நேற்று 52.60 அடியானது. அணைக்கு வினாடிக்கு 2,677 கனஅடி நீர்வருகிறது.. 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றார் 1 மற்றும் சிற்றார் 2 ஆகிய அணைகள் நிரம்ப இன்னும் 5 அடி மட்டுமே உள்ளது.

விவசாயிகள் மகிழ்ச்சி

அணைகளில் இருந்து தற்போது அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் குழித்துறை தாமிரபரணி ஆறு, பரளியாறு, பழையாறு, வள்ளியாறு ஆகியவற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும், திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. திற்பரப்புக்கு வந்த சுற்றுலா பணிகள் அருவியின் ஒரு பகுதியில் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். பாசன குளங்களில் தண்ணீர் பெருக தொடங்கியுள்ளது. இதனால் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story