பெருஞ்சாணி அணை நீர்மட்டம் ஒரே நாளில் 6.35 அடி உயர்வு
குமரி மாவட்டத்தில் மழை நீடிப்பதால் பெருஞ்சாணி அணை நீர்மட்டம் ஒரே நாளில் 6.35 அடி உயர்ந்துள்ளது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் மழை நீடிப்பதால் பெருஞ்சாணி அணை நீர்மட்டம் ஒரே நாளில் 6.35 அடி உயர்ந்துள்ளது.
மழை நீடிப்பு
குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை போதிய அளவு பெய்யாததால் நெல் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்தது. இதே போல நேற்றும் பல இடங்களில் மழை பெய்தது. மலையோர பகுதிகள் மற்றும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
நாகர்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள், கொட்டாரம், மயிலாடி, தக்கலை, குளச்சல், பூதப்பாண்டி உள்ளிட்ட இடங்களில் அதிகாலையில் இருந்தே மழை பெய்தது. சில நேரம் பலத்த மழையாகவும், சில நேரம் சாரல் மழையாகவும் பெய்துகொண்டே இருந்தது. மேலும் இடை இடையே வெயிலும் அடித்தது. அதே சமயம் பாலமோர் பகுதியில் மழை வெளுத்து வாங்கியது. அங்கு அதிகபட்சமாக 77.6 மில்லி மீட்டர் பதிவாகியது.
மழை அளவு
மாவட்டம் முழுவதும் நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேர மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பூதப்பாண்டி-9.2, களியல்-5.3, குழித்துறை-6.4, நாகர்கோவில்-2.4, புத்தன்அணை-12.8, சுருளகோடு-2.4, தக்கலை-7.3, குளச்சல்-16.4, இரணியல்-4.2, திற்பரப்பு-4.8, அடையாமடை-7, முள்ளங்கினாவிளை-7.2 என்ற அளவில் மழை பெய்திருந்தது. இதே போல அணை பகுதியில் பேச்சிப்பாறை-16.2, பெருஞ்சாணி-14.4, சிற்றார் 1-11, சிற்றார் 2-6, மாம்பழத்துறையாறு-14.2, முக்கடல் 5.2 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது.
அணை நிலவரம்
மலையோர பகுதிகளிலும், அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து இருக்கிறது. பேச்சிப்பாறை அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 478 கனஅடி தண்ணீர் மட்டும் வந்தது. அது நேற்று 1,369 கனஅடியாக அதிகரித்தது. இதே போல பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 52 கனஅடி மட்டும் வந்து கொண்டிருந்த தண்ணீர் நேற்று 1,563 கனஅடியாக உயர்ந்தது.
நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 0.93 அடி உயர்ந்துள்ளது. அதாவது 17.36 அடியில் இருந்து 18.29 அடியாக உயர்ந்துள்ளது. இதே போல 28.70 அடியாக இருந்த பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 6.35 அடி உயர்ந்து 35.05 அடியாக உள்ளது.
விவசாயிகள் மகிழ்ச்சி
குமரி மாவட்டத்தில் தற்போது மழை பெய்து வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நெல், வாழை, அன்னாசி மற்றும் ரப்பர் விவசாயிகள் மழை பெய்யாத காரணத்தால் கடும் அவதிப்பட்டு வந்தனர். குறிப்பாக நெல் பயிர்களும், ரப்பர் மரங்களில் இலைகளும் கருகும் நிலையில் இருந்தன. ரப்பர் விவசாயிகள் பால்வடிப்பு பணியை நிறுத்தும் நிலைக்கு வந்தனர்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளதால் ரப்பர் விவசாயிகள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர். இதுபோன்று நெல் மற்றும் வாழை விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.