புதிய நீர்த்தேக்க தொட்டியை பயன்படுத்திகாவிரி குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்பொதுமக்கள், கலெக்டரிடம் மனு
முட்டாஞ்செட்டி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு உள்ள தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வந்து, காவிரி குடிநீர் வினியோகம் செய்ய வலியுறுத்தி நாமக்கல் கலெக்டரிடம் அப்பகுதி பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
காவிரி குடிநீர்
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள முட்டாஞ்செட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து, குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் உமாவிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எங்கள் கிராமத்தை சேர்ந்த அனைவரும் வெகுதொலைவுக்கு சென்று ஒரே இடத்தில் காவிரி குடிநீரை பிடித்து வருகிறோம். இதனால் வயதானவர்கள் மிகவும் சிரமம் அடைந்து உள்ளனர். மேலும் இரவு நேரங்களில் கண்விழித்து குடிநீர் பிடிக்க வேண்டிய நிலை உள்ளது.
இந்த அவல நிலையை போக்குவதற்கு எங்களது ஊராட்சியில் புதிதாக கட்டியுள்ள தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியை பயன்படுத்தி, எங்கள் தெருக்களுக்கு புதிய பைப்லைன் அமைத்து காவிரி குடிநீர் விடுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
போலி சாதி சான்றிதழ்
இதேபோல் தமிழ்நாடு பழங்குடியினர் மலையாளி நல அமைப்பின் தலைவர் குப்புசாமி தலைமையில் மலைவாழ் மக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகா கொளத்தூரை சேர்ந்த நபர் ஒருவர் எஸ்.டி. என போலி சாதி சான்றிதழ் தயாரித்து, அதன் மூலம் எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்று, நாமக்கல் அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்றில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இதேபோல் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு நபரும், சென்னை மயிலாப்பூரை சேர்ந்த பெண் ஒருவரும் ரெட்டி பழங்குடியினர் (எஸ்.டி.) என போலியாக சாதிசான்று பெற்று எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்று உள்ளனர்.
இவர்கள் மீது சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எனவே பழங்குடியினர் மக்களாகிய எங்களுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டை போலி சாதி சான்றிதழ் மூலம் முறைகேடு செய்து பெற்று, உயர்கல்வி படிப்பு மற்றும் வேலைவாய்ப்பில் எங்கள் மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய இடஒதுக்கீட்டை பறித்த 3 பேர் மீதும் நடவடிக்கை எடுத்து, உடனடியாக அவர்கள் 3 பேரையும் அரசு வேலையில் இருந்து பணிநீக்கம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி இருந்தனர்.
இளம்வயது திருமணம்
எலச்சிபாளையம் ஒன்றியம் கொன்னையார் சத்யா நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எங்கள் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமிக்கும், ராசிபுரம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் கடந்த ஓராண்டுக்கு முன் இளம்வயது திருமணம் நடந்துள்ளது. இந்த திருமணத்தை நடத்தி வைத்த நபர்கள் மற்றும் இதற்கு உடந்தையாக இருந்த அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க எலச்சிபாளையம் போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி இருந்தனர்.