தர்மபுரி வணிக வரித்துறை அலுவலகத்தில் வியாபாரிகள் சங்கத்தினர் மனு
தர்மபுரி:
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கட்டுப்பாட்டில் உள்ள தர்மபுரி மாவட்ட அனைத்து வணிகர் சங்கத்தின் தலைவர் வைத்தியலிங்கம், செயலாளர் கிரிதர், பொருளாளர் ஆண்டாள் ரவிச்சந்திரன் மற்றும் வியாபாரிகள் ஊர்வலமாக சென்று தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வணிக வரித்துறை துணை ஆணையாளர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர்.
அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
அனைத்து சில்லரை கடைக்காரர்களும் பொருட்களை வாங்கும் போதே அதற்கான வரி செலுத்திவிடுகின்றனர். பின்னர் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும் அந்த பொருட்கள் ஏற்கனவே வரிவிதிப்புக்கு உட்பட்டது. ஆனாலும் வணிகவரித்துறை அதிகாரிகள் சில்லரை கடைகளில் புகுந்து டெஸ்ட் பர்ச்சேஸ் என்ற பெயரில் பொருட்களை வாங்கி அதற்கு ரசீது அளிக்கப்படவில்லை என்று கூறி அபராதம் விதிக்கின்றனர். இந்த முறை ஏற்புடையது அல்ல. இது சில்லரை, சிறு மற்றும் குறு வணிகர்களின் வாழ்வாதாரத்தை பெருமளவு பாதிக்கும்.
எனவே தமிழக அரசு சில்லரை வணிகம் செய்யும் வணிகர்களிடம் டெஸ்ட் பர்ச்சேஸ் செய்யும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும். இல்லையேல் சில்லரை, குறு, சிறு வணிகர்களை பாதிக்காத வகையில் 6 மாதங்கள் டெஸ்ட் பர்ச்சேஸ் நடைமுறையை நிறுத்தி வைத்து, வணிகர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதற்கு பின்னரே படிப்படியாக இந்த திட்டத்தினை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு அதில் அவர்கள் கூறியுள்ளனர்.