பாலக்கோடு அருகே வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும்-குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு


பாலக்கோடு அருகே வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும்-குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு
x
தினத்தந்தி 10 Jan 2023 12:15 AM IST (Updated: 10 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

பாலக்கோடு அருகே வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று கூறி குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனுஅளிக்கப்பட்டது.

பட்டா வழங்க வேண்டும்

தர்மபுரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சாந்தி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாலக்கோடு தாலுகா சக்கிலிநத்தம் கிராமத்தில் வசிக்கும் மலைவாழ் பழங்குடியின மக்கள் திரண்டு வந்து கோரிக்கை மனு அளித்தனர்.

அதில், எங்கள் பகுதியில் உள்ள மக்கள் வசிக்கும் வீடுகள் மற்றும் விவசாய நிலங்களுக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அரசின் சலுகைகளை பெற முடியவில்லை. எனவே எங்களுக்கு பட்டா வழங்க வேண்டும். இந்த பகுதியை சேர்ந்த மலைவாழ் மக்களின் குடும்பங்களை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

கால்வாயில் ஆக்கிரமிப்பு

அரூர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனுவில் அரூர் லிங்காபுரம் ஏரி நிரம்பும்போது உபரிநீர் 2 கி.மீ. தொலைவில் உள்ள ஏரிக்கு செல்லும். இந்த உபரிநீர் செல்லும் கால்வாய் கடந்த 20 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ளது.

இதேபோல் மஜித் தெரு மற்றும் வாணீஸ்வரர் கோவில் வழியாக செல்லும் கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

இதேபோல் வி.ஜெட்டிஅள்ளி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனுவில், இங்கு வசிக்கும் ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இலவச வீட்டுமனை வழங்கும் திட்டத்தில் வீட்டுமனைகள் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.


Next Story