பெரியாம்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையை இடம் மாற்ற பொதுமக்கள் கோரிக்கை
காரிமங்கலம்:
காரிமங்கலம் அருகே உள்ள பெரியாம்பட்டி டாஸ்மாக் கடையை இடம் மாற்ற செய்யக்கோரி அந்த பகுதி பொதுமக்கள் மாவட்ட டாஸ்மாக் மேலாளரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
காரிமங்கலம் ஒன்றியம் பெரியாம்பட்டியில் மாநில நெடுஞ்சாலையில் பொதுமக்கள் குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை கடந்த பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த கடை அருகே பல்வேறு கல்லூரிகள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஆகியவை உள்ளன. இந்த டாஸ்மாக் கடைக்கு வரும் மதுப்பிரியர்களால் கல்லூரி மாணவ-மாணவிகள், பெண்கள் என பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் மதுப்பிரியர்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சாலையின் இருபுறங்களிலும் அமர்ந்து மது குடிப்பதுடன், பெண்கள் மற்றும் மாணவிகளை கேலி, கிண்டல் செய்து வருகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி டாஸ்மாக் கடையை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் அவர்கள் கூறியுள்ளனர்.