ஓசூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு பெண்கள் முறையீடு


ஓசூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு பெண்கள் முறையீடு
x
தினத்தந்தி 4 April 2023 12:15 AM IST (Updated: 4 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தாலுகா பழைய மத்திகிரி, 44-வது வார்டு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சார்பில், 60-க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று ஓசூர் உதவி கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து, உதவி கலெக்டர் சரண்யாவிடம் கோரிக்கை மனு ஒன்றை வழங்கினர். அதில், 'ஏழைகளாகிய நாங்கள் வீடுகளில் வேலை செய்து, நீண்ட காலமாக வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். தற்போது எங்கள் பகுதியில் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இதனை வசதி படைத்தவர்களுக்கே வழங்கப்படுவதாக அறிந்தோம். ஏழைகளாகிய எங்களின் கோரிக்கையை பரிசீலித்து ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கேட்டு கொண்டுள்ளனர்.

பின்னர் அங்கு வந்திருந்த பெண்களில், நாகம்மா, ஆஷா, மஞ்சு மற்றும் சவீதா ஆகியோர் கூறும் போது, 'இலவச வீட்டு மனைப்பட்டாவிற்காக, நாங்கள் பல முறை பல்வேறு அலுவலகங்களில் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது இந்த வார்டு கவுன்சிலர், பணம் பெற்றுக்கொண்டு அம்பேத்கர் காலனியில், வெளியூரில் இருந்து வந்தவர்களுக்கும், வசதி படைத்தவர்களுக்கும் இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்கி வருகிறார். எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால், நாங்கள் சாலைமறியலில் ஈடுபடுவோம்' என்றார்கள்.

இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு, உதவி கலெக்டர் அலுவலகத்திற்கு பெண்கள் திரண்டு வந்ததால் அங்கு பரபரப்பாக காணப்பட்டது.


Next Story