கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி முன்பு மேம்பால கட்டுமான பணிகளை விரைந்து தொடங்க வேண்டும்-சமூக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்கம் கோரிக்கை


கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி முன்பு மேம்பால கட்டுமான பணிகளை விரைந்து தொடங்க வேண்டும்-சமூக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்கம் கோரிக்கை
x
தினத்தந்தி 5 April 2023 12:15 AM IST (Updated: 5 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் மற்றும், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி டீன் ராஜஸ்ரீ ஆகியோரிடம் சமூக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் மாநில பொது செயலாளர் சந்திரமோகன் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

கிருஷ்ணகிரியில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போலுப்பள்ளியில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்காக வருகிறார்கள். தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்லும் இந்த மருத்துவமனை முன்பு அடிக்கடி விபத்துகளும், உயிர் இழப்புகளும் நடந்து வந்தன. இதனால் இங்கு மேம்பாலம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்காக மேம்பாலம் கட்டுவதற்கான ஆயத்த பணிகள் நடந்து வருகிறது.

இதில் மருத்துவமனையின் நுழைவு வாயிலில் இருந்து 500 மீட்டர் தொலைவில் பாலத்தின் மையப்பகுதி அமைய உள்ளதால் மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள் நீண்ட தூரம் நடந்து செல்லும் நிலை ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே பாலத்தின் மையப்பகுதி மருத்துவமனையின் நுழைவு வாயில் முன்பாக அமையும் வகையில் அங்கு மேம்பாலம் கட்ட வேண்டும். மேலும் இந்த பணிகளை விரைந்து தொடங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அப்போது நிர்வாகிகள் கேசவன், தமிழரசன், ரோஹீத், ஹரி, சூரியா, ஸ்ரீராம் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story