3 பேரை சொந்த ஊருக்கு அனுப்ப மறுக்கும் அதிகாரிகள்
3 பேரை சொந்த ஊருக்கு அனுப்ப மறுக்கும் அதிகாரிகள் குறித்து கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் புத்தேந்தல் கிராமத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை இலவசமாக பராமரிக்கும் காப்பகம் உள்ளது. இந்த காப்பகத்தில் தெருவோரத்தில் மனநலம் பாதிக்கப்பட்டு திரிந்தவர்களை பிடித்து வந்து போலீசார் மற்றும் சமூக நலத்துறையினர் ஒப்படைத்துள்ளனர். அவர்களுக்கு அங்கு தங்குமிடம், சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மேற்குவங்கம், மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த 3 மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கு சேர்க்கப்பட்டனர். தற்போது அவர்கள் முழுமையாக குணமடைந்துள்ளனர். அவர்கள் தங்களது முகவரியை தெரிவித்து தாங்கள் சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மனநல காப்பக நிர்வாகிகள் சமூக நலத்துறை அதிகாரிகளிடம் அவர்களை சொந்த ஊருக்கு அனுப்ப அனுமதி அளிக்குமாறு கேட்டு பலமுறை கோரிக்கை மனு அளித்துள்ளனர். ஆனால் இதுவரை 3 பேரை அவர்களது சொந்த ஊருக்கு திருப்பி அனுப்ப எந்தவித அனுமதியும் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், குணமடைந்தவர்களை தொடர்ந்து மனநலம் பாதித்தவர்களோடு வைத்திருந்தால் அவர்களுக்கு மனச்சிதைவு ஏற்படும் என்றும், அந்த 3 பேரையும் அதிகாரிகளிடமே ஒப்படைக்க போவதாக கூறி காப்பக நிர்வாகிகள், கலெக்டர் அலுவலகத்திற்கு அழைத்து வந்து கலெக்டரிடம் மனு அளித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.